Published : 31 Oct 2020 03:14 AM
Last Updated : 31 Oct 2020 03:14 AM

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது பிறந்த நாள் விழா அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை

பாஜக சார்பில் மரியாதை செலுத்திய அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள். (அடுத்த படம்) தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மரியாதை செலுத்துகிறார்.படங்கள்: ம.பிரபு

சென்னை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் அவரது சிலைக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது பிறந்த நாள்விழா மற்றும் குருபூஜை நேற்றுகொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை நந்தனத்தில்உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அருகில்அவருடைய படம் மலர்களால்அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.சி.சம்பத், க.பாண்டியராஜன், கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்ததோடு சிலைக்கு அருகில் வைக்கப்பட்டு இருந்த அவரது படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சிலை மற்றும் படத்துக்கு மலர் தூவியும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் சு. திருநாவுக்கரசர் எம்.பி, திமுக சார்பில்மாவட்ட செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான மா.சுப்பிரமணியம், பாமக சார்பில் சென்னை மாவட்ட அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன், அமமுக சார்பில் தேர்தல் பிரிவு செயலாளர் ஜி.செந்தமிழன் ஆகியோரும் அடுத்தடுத்து முத்துராமலிங்கத் தேவர் சிலை மற்றும் அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், சமக பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வசீகரன், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் வேட்டவலம் மணிகண்டன் ஆகியோரும் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில்அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் சீமான் தலைமையில் மலர் வணக்க நிகழ்வு நடத்தப்பட்டது. இதேபோல், பெண்கள் பலர் பால்குடம், முளைப்பாரி எடுத்துவந்து முத்துராமலிங்கத் தேவர் சிலையை வழிபட்டனர். முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செய்ய வந்தவர்கள் முகக் கவசம் அணிந்திருந்தனர். சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் படி காவல் துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர்.

முதல்வர் மற்றும் அரசியல் கட்சியின் தலைவர்கள் வெளியிட்ட முகநூல் மற்றும் ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:

முதல்வர் பழனிசாமி: இந்திய தேசிய ராணுவத்துக்கு தமிழகத்தில் இருந்து பெரும் படையை திரட்டி சுதந்திர வேட்கையை விதைத்த முத்துராமலிங்கத் தேவரை வணங்கி போற்றுகிறேன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: தமிழ் மொழி, விவசாயிகள் நலன், சமுதாய ஒற்றுமை போன்றவற்றுக்காக தன் வாழ் நாள் முழுவதும் பாடுபட்டவர். அவர் காட்டிய பொது வாழ்வில் தூய்மையை மீட்டெடுக்க உறுதி ஏற்போம்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்: தேசியமும் தெய்வீகமும் என் இரு கண்கள் என்று வாழ்ந்த முத்துராமலிங்க தேவருக்கு நம் வீரம் போற்றும் வீர வணக்கங்கள்.

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன்: வசதியான குடும்பத்தில் பிறந்து தேசீயம், தெய்வீகம் என இரண்டையும் இரு கண்களாக போற்றி வாழ்ந்த பசும்பொன் தேவரின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழா சிறக்க வாழ்த்துகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x