Published : 31 Oct 2020 03:14 AM
Last Updated : 31 Oct 2020 03:14 AM
மருத்துவர், செவிலியரை தாக்கிய வழக்கில் காவல் ஆய்வாளர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்தவர் சண்முகசுந்தரம் (45). இவரது தந்தை பக்கிரிசாமி (74) கடந்த செப்டம்பர் 24-ம் தேதிசர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், கடந்த 1-ம் தேதி உயிரி ழந்தார்.
உரிய சிகிச்சை அளிக்கவில்லை என கூறி ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர்களை தாக்கியதோடு, அவர்களின் செல்போனையும் பறித்துச் சென்றதாக புகார் எழுந்தது. இதனை கண்டித்து பொது மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியகள், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது மருத்துவ பணியாளர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் உறவினர் சிலர் மீது மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் பெரியக்கடை ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
இந்த வழக்கு தொடர்பாக ஆய்வாளர் செந்தில்குமார் விசாரணையை முடித்து நேற்று புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தார். அரசு வழக்கறிஞர் பிரவீன்குமார் அந்த குற்றப் பத்திரிகையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். மருத்துவப் பணியாளர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தால் ஒரு மாதத்துக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி போலீஸார் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT