Published : 31 Oct 2020 03:14 AM
Last Updated : 31 Oct 2020 03:14 AM

நெல்லை வேய்ந்தான்குளத்தைப் போல் நயினார்குளத்தில் பறவைகளுக்காக மணல் திட்டுகள் உருவாக்கப்படுமா?

திருநெல்வேலி நயினார்குளத்தில் காணப்படும் பறவைகள். படங்கள் மு. லெட்சுமி அருண்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகரில் பறவைகள் அதிகளவில் தஞ்சம் புகும் வகையில் அமைந்துள்ள, நயினார்குளத்தில் செயற்கை மணல் திட்டுகளை உருவாக்க வேண்டும். அத்துடன் கூடுதலாக மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்று, பறவைகள் ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.

திருநெல்வேலியில் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள இடமான வேய்ந்தான்குளத்தில் கடந்த ஆண்டில் பருவ மழை காலத்துக்குமுன் செயற்கையாக மணல் திட்டுகள் உருவாக்கப் பட்டன. இதனால், ஏராளமான பறவைகள் இந்த குளத்துக்கு வந்திருந்தன. தற்போது, இந்த குளத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டிருக்கிறது. மழை பெய்து தண்ணீர் பெருகினால்தான் இந்த குளத்துக்கு பறவைகள் வரத்து இருக்கும்.

ஆனால், ஆண்டுமுழுக்க தண்ணீர் இருக்கும் நயினார்குளத் தில் எப்போதும் பறவைகள் வரத்து காணப்படுகிறது. பாசனத்துக்காக திருநெல்வேலி கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் நயினார்குளத்தில் தண்ணீர் பெருகு கிறது. தாமிரபரணி தண்ணீர் வந்துசேரும் இந்த குளத்தை சுற்றுலாதலமாக மாற்றுவது குறித்து கடந்த பல ஆண்டுகளாக திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்தால் பேசப்படுகிறது.

தற்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் பணிகளை மேற்கொள்ளும், மாநகராட்சி நிர்வாகம், திருநெல் வேலி மாநகரின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்று, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வரு கிறார்கள். அந்தவகையில், ஆண்டு முழுக்க தண்ணீர் இருக்கும் நயினார்குளத்தில் இயற்கை வளத்தை மேம்படுத்தவும், இங்குவரும் பறவைகளுக்கு புகலிடமாக கரைகளில் அதிகளவில் மரங்களை வளர்த்தெடுக்கவும், வேய்ந்தான்குளத்தைப்போல் இங்கும் செயற்கை மணல் திட்டுகளை உருவாக்கி பறவைகள் தங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பாசனத்துக்காக பயன்படும் இந்த குளத்தில் கழிவுகள் அதிகம் சேரும் பிரச்சினைக்கு தீர்வு காண்ப துடன் பறவைகளின் புகலிடமாக மாற்றுவதற்கான திட்டங்களையும் செயல்படுத்த அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன.

இதுகுறித்து, பறவைகள் ஆய்வாளரான அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வளகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் மதி வாணன் கூறியதாவது:

நகர்ப்புறங்களில் உள்ள நீர்நிலை களுக்கு பறவைகள் அதிகளவில் வருவது பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் குறைந்து வருகிறது. ஆனால் திருநெல்வேலி மாநகரில் நயினார்குளத்தில் அதிகளவில் பறவைகள் வந்து கொண்டிரு க்கின்றன. இந்த குளத்தின் மேலக்கரையில் வடபகுதியில் உள்ள நீர்கருவை, மருதம், இலுப்பை, பனைமரங்களில் ஏராளமான பறவைகள் தஞ்சம் புகுந்துள்ளன. கடந்த மாதத்தில் இந்த மரங்களில் பாம்பு தாரா, சாம்பல் நாரை உள்ளிட்ட பறவைகள் கூடுகளை கட்டியிருந்ததை காணமுடிந்தது.

இந்த குளத்தின் கரைகளில் மேலும் அதிகமான மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். அதுபோல் குளத்தினுள் வேய்ந்தான்குளத்தைப்போல் மணல் திட்டுகளை உருவாக்கலாம். அவ்வாறு செய்தால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் இந்த குளத்துக்கு வரும் வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x