Published : 30 Oct 2020 03:14 AM
Last Updated : 30 Oct 2020 03:14 AM
திருவண்ணாமலை: தமிழ்நாடு சாலை ஆய்வாளர்கள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது.
மாநில தலைவர் ஏ.சுரேஷ் தலைமை வகித்தார். துணை தலைவர்கள் குலோத்துங்கன், செல்வநாயகம், பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை கோட்ட தலைவர் விஜயகுமார் வரவேற்றார். மாநில தலைவர் எஸ்.சுரேஷ், மாநில பொதுச் செயலாளர் திருமுருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், “இளநிலை பொறியாளர் மற்றும் இளநிலை தொழில் அலுவலர் ஆகிய பணியிடங்களை தகுதி உள்ள சாலை ஆய்வாளர்களை கொண்டு நிரப்ப வலியுறுத்தி அனைத்து கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு மாலை நேர ஆர்ப்பாட்டம் நடத்துவது, விதிகளை மீறி 2-ம் நிலை சாலை ஆய்வாளர்களை நியமனம் செய்த கோட்ட பொறியாளர்களை கண்டிப்பது, இது தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்வது, காலியாக உள்ள 2-ம் நிலை சாலை ஆய்வாளர்களை நேரடி நியமனம் மூலம் அரசு விதிகளுக்கு உட்பட்டு நியமிக்க வேண்டும்.
நீதியரசர் முருகேசன் தலைமையிலான ஊதிய முரண்பாட்டு குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும். ஐடிஐ முடித்து 10 ஆண்டுகள் பணிநிறைவு செய்துள்ள சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், திருவண்ணாமலை மாவட்ட பொருளாளர் சுகுணா, மாவட்ட துணை செயலாளர் பச்சையப்பன், மாவட்ட துணை தலைவர் ரமேஷ், வட்ட கிளை தலைவர் ரமேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், திருவண்ணாமலை கோட்ட செயலாளர் பரணி நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT