Published : 04 Dec 2021 03:07 AM
Last Updated : 04 Dec 2021 03:07 AM
நாடாளுமன்றத்தின் குளிர்காலகூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. மக்களவை யில் நேற்று பூஜ்ய நேரத்தில் 109 உறுப்பினர்கள் பேசியதால் அவை செயல்பாடு 117 சதவீத அளவுக்கு இருந்தது. பகலில் மொத்தம் 120 உறுப்பினர்கள் பேசினர். இதில் கரோனா நிலைமை மற்றும் விளைவுகள் குறித்து, விதி 193-ன் கீழ் முழுமையான விவாதம் நடைபெற்றது.
மாநிலங்களவையில் 2019-ம்ஆண்டு அணை பாதுகாப்பு மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மசோதா அரசியலமைப்பு சட்டம் மற்றும் கூட்டாட்சிக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதனை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் மறுத்தார். “இந்த மசோதா தண்ணீர், அணை மற்றும் மின்சாரம் போன்ற வளங்கள் மீதான மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கவில்லை. மாறாக அணை பாதுகாப்பு விதிமுறைகளை உறுதிப்படுத்தவும் அணை தொடர்பாக பேரழிவுகளை தடுக்கவும் மட்டுமே முயற்சிக்கிறது” என்றார்.
மக்களவையில் 2019ல் நிறை வேற்றப்பட்ட இந்த மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என திமுக உறுப்பினர் திருச்சி சிவா தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு 28 உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்தால் திமுகவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அமைச்சர் ஷெகாவத் பதில் அளிக்கையில், “பொது நலன் கருதி அணை பாதுகாப்பு விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வரலாம் என மசோதா வுக்கு ஒப்புதல் அளித்த நிலைக் குழு கூறியுள்ளது. இந்தக் கருத்தை சொலிசிட்டர் ஜெனரலும் ஆமோதித்தார்” என்று கூறினார்.
இதையடுத்து குரல் வாக் கெடுப்பு மூலம் அணை பாது காப்பு மசோதா நிறைவேறியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT