Published : 03 Dec 2021 03:06 AM
Last Updated : 03 Dec 2021 03:06 AM
“காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவி என்பது ஒரு தனிநபரின் உரிமை அல்ல” என்று தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று அவர் கூறியிருப்பதாவது:
எந்த சிந்தாந்தத்திற்காக, கொள்கைக்காக காங்கிரஸ் தற்போது களத்தில் நிற்கிறதோ அது ஒரு வலிமையான எதிர்க்கட்சிக்கு மிகவும் முக்கியமானது. இதில் எந்தமாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அதே சமயத்தில், அந்தக் கட்சியின் தலைமைப் பதவிக்கு வருபவரை ஜனநாயக முறைப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பதும்அவசியம். காங்கிரஸ் தலைமைப் பதவி என்பது ஒரு தனிநபருக்கான உரிமை கிடையாது. அதுவும், கடந்த 10 ஆண்டுகளில் நடந்த 90 சதவீதம் தேர்தல்களில் தோல்வியைடந்த ஒரு கட்சியில் இவ்வாறு நடக்கக் கூடாது என பிரசாந்த் கிஷோர் கூறினார்.
காங்கிரஸ் மீது திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தொடர்ச்சியாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். மும்பையில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். வெளிநாட்டில் பாதி நாட்கள் இருந்துகொண்டு, இங்குஅரசியல் செய்ய முடியாது” எனக்கூறியிருந்தார். இது, ராகுல் காந்தியை அவர் மறைமுகமாக விமர்சித்ததாக கூறப்பட்டது. அதேபோல, “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்பதே இப்போது இல்லை” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாட்டினை மம்தா பானர்ஜி தற்போது எடுத்திருப்பதாக கருதப்படும் சூழலில், அவரது கட்சிக்கு தேர்தல் வியூகராக செயல்படும் பிரசாந்த் கிஷோரும் காங்கிரஸை விமர்சித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT