Published : 28 Nov 2021 03:06 AM
Last Updated : 28 Nov 2021 03:06 AM

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை - காவிரியில் தமிழகத்துக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு :

பெங்களூரு

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் காவிரி யின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிக்கேரி உள்ளிட்ட இடங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ள‌ப்பெருக்கு ஏற் பட்டுள்ளதால் கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று மாலை 6 மணி நிலவரப் படி, மண்டியாவில் 124.80 அடி உயரமுள்ள‌ கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 123.15 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 11 ஆயிரத்து 620 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், விநாடிக்கு 10 ஆயிரத்து 853 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மைசூரு மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரம் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 2,283 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1,861 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், விநாடிக்கு 1,400 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கிருஷ்ண ராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய இரண்டு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு மொத்தமாக 12 ஆயிரத்து 253 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதாக காவிரி நீர்ப்பாசன கழக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x