Published : 26 Nov 2021 03:06 AM
Last Updated : 26 Nov 2021 03:06 AM
திருப்பதி: ஒவ்வொரு மாதமும், அடுத்த மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் இலவச டிக்கெட்டுகளை (சர்வ தரிசன டிக்கெட்) திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது. இதனை பக்தர்கள் பெற்று, குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் திருப்பதிக்கு வந்து, சுவாமியை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இந்த டிக்கெட்டுகள் ஒவ்வொரு மாதமும் 20-ம் தேதி முதல் 23-ம் தேதிக்குள் வழங்கி வரப்பட்டது. இந்த மாதம் இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
சமீபத்தில் திருப்பதி மற்றும் திருமலையில் பலத்த மழை காரணமாக வெள்ளபாதிப்பு ஏற்பட்டது. இதனால், அலிபிரி மற்றும் வாரி மெட்டு நடைபாதைகள் முற்றிலுமாக சீர் குலைந்து போனது. இதேபோன்று, திருமலையில், நாராயணகிரி பகுதியில் உள்ள சில விடுதிகளின் பின்பக்க சுவர்களும் மழைக்கு விழுந்து விட்டது. மேலும், பாபவிநாசம், ஆகாசகங்கை போன்ற தடங்களிலும் மரங்கள் சாய்ந்துவிட்டதால் அந்த தடங்களும் மூடப்பட்டு விட்டன. மழை பாதிப்பால் ஆன்லைனில் டிக்கெட் வெளியிட தாமதமாகி உள்ளது என தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT