Published : 14 Nov 2021 03:06 AM
Last Updated : 14 Nov 2021 03:06 AM
சமூக வலைதளங்கள், சமூக விரோத வலைதளங்களாக மாறி வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்தவது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு 3 நாள் பயணமாக ஆந்திர மாநிலம் நெல்லூர் வந்துள்ளார். இதில் 2-ம் நாளான நேற்று, நெல்லூரில் நடைபெற்ற ஒரு தனியார் விழாவில் கலந்துகொண்டார்.
இதில் அவர் பேசியதாவது: இப்போதுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்களை கண்டால், அரசியல் மீதே வெறுப்பு ஏற்படுகிறது. இவர்கள் மாற வேண்டும். மக்களோடு மக்களாக அவர்களுக்கு நேரடியாக செய்யும் சேவையில் கிடைக்கும் மனநிறைவு உயர்ந்த பதவிகளில் கூட கிடைப்பதில்லை. குடியரசு துணைத் தலைவர் பதவி என்பது எனக்கு ஒரு அலங்காரம் என்றே கருதுகிறேன். விரைவில் நான் சொந்த ஊரான நெல்லூருக்கு வந்து, மக்களோடு இணைந்து அவர்களுக்கு சேவைபுரிய ஆசைப்படுகிறேன். ஆனால் சிலர், குடியரசுத் தலைவராக உங்களை காண வேண்டும் என கூறுகின்றனர்.
இன்றைய சூழ்நிலையில், ஒரு பத்திரிகை மட்டும் படித்தால் உண்மை தெரியாது என்பதால் 4 அல்லது 5 நாளிதழ்களை படிக்க வேண்டியுள்ளது. அப்போதும் கூட உண்மை விளங்கவில்லை. தற்போது சமூக வலைதளங்கள் சமூக விரோத வலைதளங்களாக மாறி வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். தாய்மொழி நமக்கு மிகவும் முக்கியம். தாய் மொழி என்பது தனி மனிதனின் அடையாளம். இதனை நாம் இழக்கக் கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT