Published : 12 Aug 2021 03:20 AM
Last Updated : 12 Aug 2021 03:20 AM
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளால் தூக்கமில்லாமல் தவித்தேன் என்று மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு கூறினார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 19-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண்சட்டங்கள் விவகாரம் ஆகியவற்றை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கி வருகின்றன. நேற்று முன்தினமும் இரு அவைகளும் 16-வது நாளாக முடங்கின.
இந்நிலையில் நேற்று காலைநாடாளுமன்றம் கூடியதும் எதிர்க்கட்சிகள் அதே விவகாரத்தை கிளப்பின. தொடர்ந்து அவர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவைஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவை பகல் 12 மணி வரையும் மக்களவை தேதி குறிப்பிடாமலும் ஒத்தி வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாக மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால் தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். மாநிலங்களவையில் அவர் கண்ணீர் விட்டவாறே பேசினார். அவையில் அவர் பேசியதாவது:
நேற்று ஒரு பிரச்சினையை எழுப்பி விவாதம் செய்ய கோரப்பட்டபோது அதற்கு அனுமதி தரப்பட்டது. ஆனால் மாநிலங்களவையின் மாண்பை காக்க எம்.பி.க்கள் தவறிவிட்டனர்.
அவையில் அவர்களின் செயல்பாடு எல்லையை மீறிவிட்டது. நேற்று சில உறுப்பினர்கள் மேஜையின் மீது ஏறி போராட்டம் நடத்தினர். கோஷம் எழுப்பினர். இதனால் நாடாளுமன்றத்தின் புனிதத்தன்மை சிதைக்கப்பட்டுள்ளது.
அவையில் உறுப்பினர் களுக்குள் கருத்து வேறுபாடு இருக் கலாம். விவாதிக்கலாம், எதிர்ப்பு தெரிவிக்கலாம், வாக்களிக்கலாம். ஆனால் அனைத்து எம்.பி.க்களும் கண்ணியமாக இருக்க வேண்டும். அவைகளில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்களால் நான் மிகவும் வேதனை அடைந்தேன். மிகவும் வருத்தமுற்றேன். வேதனையை தெரிவிக்க எனக்குவார்த்தைகளே இல்லை. தூக்கமில்லாமல் நான் இரவைக் கழித்தேன். இதைச் செய் அல்லது அதைச் செய் என நீங்கள் எந்த அரசாங்கத்தையும் கட்டாயப் படுத்த முடியாது.
இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT