Published : 11 Aug 2021 03:16 AM
Last Updated : 11 Aug 2021 03:16 AM
"நாட்டில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் காஸ் இணைப்பை பெறுவதற்கு ரேஷன் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை" என்றுபிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தங்களின் முகவரியை ஒரு தாளில் எழுதிக் கொடுத்தாலே அதுவே அவர்களின் முகவரிச் சான்றாக இனி கருதப்பட்டு காஸ் இணைப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நாட்டில் உள்ள ஏழைகளுக்கு இலவச காஸ் இணைப்பை வழங்கும் உஜ்வாலா திட்டம் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, டெபாசிட் பணத்தை செலுத்தாமலேயே காஸ் இணைப்பை பயனாளிகள் பெற்றுக் கொள்ள முடியும். இந்த திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கானோர் பயனடைந்தனர்.
இந்நிலையில், உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ‘உஜ்வாலா 2.0’ என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலமாக நேற்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டு இறுதிக்குள் சுமார் 1 கோடி ஏழை மக்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
மத்தியில் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, ஏழை மக்களின் நலன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. எந்தவொரு திட்டமாக இருந்தாலும், அதன் மூலம் ஏழைகளின் வாழ்வாதாரத்தை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதில் தான் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. இதன் காரணமாகவே, கடந்த ஆறரை ஆண்டுகளில் ஏழைகளின் வாழ்க்கைத் தரம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது.
குறிப்பாக, உஜ்வாலா திட்டத்தின் மூலமாக சமூக – பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள லட்சக்கணக்கான குடும்பங்கள் இலவசசமையல் எரிவாயு இணைப்பை பெற்றிருக்கின்றன. அனைவருக்குமான வளர்ச்சி என்பதற்கு சிறந்த உதாரணம் இதுவாகும்.
இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தற்போது ‘உஜ்வாலா 2.0’ என்ற திட்டத்தை மத்தியஅரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது.இதன் மூலம் நாட்டின் எந்தப் பகுதியில் வேலை செய்யும் புலம்பெயர் தொழிலாளர்களிலும் மிக எளிதாக தங்கள் வீடுகளுக்கு இலவச காஸ் இணைப்பை பெற முடியும். காஸ் இணைப்பை பெறுவதற்காக அவர்கள் ரேஷன் அட்டையையோ அல்லது பிற ஆவணங்களையோ இனி காண்பிக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, ஒரு தாளில் தங்கள் முகவரியை எழுதிக் கொடுத்தாலே போதுமானது. அதுவே அவர்களின் முகவரிச் சான்றாக கருதப்படும். புலம்பெயர் தொழிலாளர்களின் நேர்மை மீது அரசு வைத்திருக்கும் நம்பிக்கைக்கு அடையாளமாக இந்த சலுகை வழங்கப்பட்டிருக்கிறது.
உத்தரபிரதேசம், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வேலைசெய்து வருகின்றனர். அவர்கள் தங்கள் வீடுகளுக்கு காஸ் இணைப்பை பெற மிகவும் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு இத்திட்டம் பேருதவியாக இருக்கும். இவ்வாறு மோடி பேசினார்.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT