Published : 10 Jun 2021 03:11 AM
Last Updated : 10 Jun 2021 03:11 AM
பாஜக ஆளும் உ.பி.யின் அரசியலில் பிரியங்கா வதேராவின் வரவுக்கு பின் காங்கிரஸ் சற்று உற்சாகமடைந்து வருகிறது. இங்கு பிரியங்காவிற்கு அடுத்த நிலையில் முக்கியத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாத் இருந்தார். ராகுலுக்கும் நெருக்கமான இவருக்கு, உ.பி.யில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர் தலுக்காக கட்சியில் முக்கிய பொறுப்புகளும் கொடுக்கப்பட்டி ருந்தன.
இச்சூழலில் டெல்லியில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் ஜிதின் நேற்று பாஜகவில் இணைந் தார். உ.பி.யில் முதல்வர் ஆதித்யநாத்திற்கு பிறகு அவரது தாக்கூர் சமூகத்தினருக்கு செல்வாக்கு கூடி,தமக்கு குறைந்ததாகப் பிராமணர்கள் இடையே அதிருப்தி நிலவுகிறது. ஜிதினின் வரவு, உ.பி.யில் 14 சதவிகிதம் உள்ள பிராமணர்களுக்கு ஆதரவான அரசியலை தூக்கிப் பிடிப்பதற்கு பாஜகவுக்கு சாதகமாகி உள்ளது. பிராமண வகுப்பின் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அர்விந்த் சர்மா சமீபத்தில் பாஜகவில் இணைந்திருந்தார்.
ஜிதின் பிரசாத்தின் விலகலால் காங்கிரஸுக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. கட்சி தலைமைக்கு எதிராக கடிதம் எழுதிய 23 காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஜிதினும் ஒருவராக இருந்தார். கட்சிக்கு நிரந்தரத் தலைவர் அவசியம் என வெளிப்படையாகவே கருத்து கூறியவர், மேற்கு வங்க தேர்தலில் புதிய முஸ்லிம் கட்சியான இந்திய மதச்சார்பற்ற முன்னணியுடன் காங்கிரஸ் வைத்த கூட்டணியையும் விமர்சித்திருந்தார்.
இவரது தந்தையான ஜிதேந்திர பிரசாத் காங்கிரஸின் முக்கியத் தலைவராக இருந்தவர். இந்திரா காந்தி காலம் முதல் காங்கிரஸுக்கு பலமாக இருந்தவர். கடந்த 1999-ல் சோனியாவை கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜிதேந்திர பிரசாத் எதிர்த்து போட்டியிட்டார். இவரது மகன் ஜிதினுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக உறுதி கூறியதால் ஜிதேந்திரா பிரசாத் பின்வாங்கினார்.
மக்களவை தேர்தலில் கிடைத்த வாய்ப்பால் மகன் ஜிதின் எம்.பி.யாகி அமைச்சரவையிலும் இருந்தார். 2014 தேர்தலில், வெற்றி பெற்றவருக்கு 2019-ல் பாஜக வேட்பாளரிடம் தோல்வி கிடைத்தது.
ராகுலுக்கு நெருக்கமாக இருந்த ஜோதிர்ஆதித்ய சிந்தியா கடந்த வருடம் பாஜகவில் இணைந்தார். இவரால் காங்கிரஸுக்கு மத்திய பிரதேசத்தில் ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டது. பாஜகவில் இணைந்த சிந்தியா மாநிலங்களவை எம்.பி.யானார். அதேபோல், ஜிதினுக்கும் எம்.பி பதவி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
இப்போது, ஜிதினின் நுழைவால் உ.பி.யில் மேலும் பல காங்கிரஸ் தலைவர்கள் பாஜக.வில் சேரும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT