Published : 27 Apr 2021 06:29 AM
Last Updated : 27 Apr 2021 06:29 AM
கரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. அதற்கான செலவுக்கு முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு பலரும் பணம் அனுப்புகின்றனர். அதை அறிந்த கண்ணூர் மாவட்டம், குருவா பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர், அந்தப் பகுதியில் இருக்கும் வங்கிக்கு சென்றார். பிறவியிலேயே இரு காதுகளும் கேட்காத அவர், தன் வங்கிக் கணக்கில் இருந்த 2 லட்சத்து 850 ரூபாயில், 2 லட்சம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு மாற்றினார். அவரது கணக்கில் வெறும் 850 ரூபாய் மீதம் உள்ளது.
ஆடு விற்று மீண்டும் உதவிய மூதாட்டி
கொல்லம், பள்ளித்தோட்டம் பகுதியில் தேநீர் கடை நடத்தி வரும் சுபைதா, ஆடு வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார். கரோனாவின் இரண்டாவது அலையின் தீவிரத்தை உணர்த்த சுபைதா, தான் வளர்த்து வரும் ஆடுகளில் ஒன்றை முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு கொடுப்பதற்காக விற்பனை செய்தார். கொல்லம் மாவட்ட ஆட்சியர் அப்துல் நாசரை சந்தித்த சுபைதா, ஆடு விற்ற பணத்தில் 5 ஆயிரம் ரூபாயை முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு கொடுத்தார். ஆடு விற்றதில் தன்வசம் மிச்சம் இருக்கும் பணத்தில் 30 ஏழைக் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியும் வாங்கி விநியோகித்தார். இதயநோயாளியான தன் கணவரின் மருத்துவச் செலவையும், குடும்ப பொருளாதாரத்தையும் தாங்கிப் பிடிக்கும் சுபைதா, ஆட்டை விற்று முதல்வர் நிவாரண நிதிக்கு கரோனாவின் முதல் அலையின் போதும் பணம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT