Published : 01 Mar 2021 03:16 AM
Last Updated : 01 Mar 2021 03:16 AM

தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களில் காங். தலைவர்கள் விசுவாசத்துடன் நடந்து கொள்ள வேண்டும் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி வேண்டுகோள்

புதுடெல்லி

தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் விசுவாசத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவரும், பிரபல வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அமைப்புகளை மறுசீரமைத்து, கட்சிக்கு வலிமையான தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன் கட்சி தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்த தலைவர்களின் அதிருப்தி கோஷத்தால் கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களில் சிலர் நேற்று முன்தினம் ஜம்முவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். இதில் அதிருப்தி தலைவர்களில் ஒருவரான கபில்சிபல் பேசும்போது, ‘நாங்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிரானவர்கள் அல்ல. காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்து வருவதாக நாங்கள் உணர்கிறோம். எனவே அதற்கு புத்துணர்ச்சி அளித்து, அதன் மகிமையை மீட்டெடுப்பதற்கான நேரம் வந்து விட்டது. அதற்காகவே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். கட்சியை வலிமைப்படுத்துவதற்காக கடந்த காலத்தை போல உழைக்கப்போகிறோம். கட்சியின் மூத்த தலைவரான குலாம்நபி ஆசாத் மாநிலங்களவையில் இருந்து பணி நிறைவு பெற்றிருக்கும் நிலையில் அவரது அனுபவத்தை காங்கிரஸ் கட்சி பயன்படுத்தாதது வருத்தம் அளிக்கிறது" என்றார்.

நாங்கள் இருந்த காலத்தில் கட்சி வளர்ச்சி பெற்று உயர்நிலைக்குச் சென்றது. தற்போது நாங்கள் வயதான நிலையில் கட்சியின் அழிவைப் பார்க்க விரும்பவில்லை என்றும் சிலர் தலைவர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், மனீஷ் திவாரி, புபிந்தர் சிங் ஹூடா, ராஜ் பப்பர், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கட்சி மற்றும் நாட்டை பலப் படுத்துவதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாக உறுதி எடுத்துக் கொண்ட இந்த தலைவர்கள், பாஜகவை வலுப்படுத்த நாட்டின் வளங்களைப் பயன்படுத்துவ தாகவும் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் கட்சியைக் குறை கூறுவதை விட்டுவிட்டு தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்கள் மீது கவனம் செலுத்தவேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x