Published : 26 Feb 2021 03:14 AM
Last Updated : 26 Feb 2021 03:14 AM

போர் நிறுத்த ஒப்பந்தங்களை கடைப்பிடிப்போம் இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் கூட்டாக அறிவிப்பு

புதுடெல்லி/இஸ்லாமாபாத்

இந்தியா - பாகிஸ்தான் இடையேகடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தங்களை கடைப்பிடிக்க இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரிமாதம் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய விமானப் படை அதிரடி தாக்குதலைநடத்தியது. இதில் 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அனைத்து உறவுகளும் முழுமையாக துண்டிக்கப்பட்டன. பின்னர், அதே ஆண்டில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா பறித்ததால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு உருவானது. அப்போது முதலாக, காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது அதிகரித்தது. இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வந்தது.காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசதளங்களில் பாகிஸ்தான் எழுப்புவதும், அதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிப்பதும் தொடர்கதையானது.இந்த சூழலில், இந்தியா - பாகிஸ்தான் ராணுவத்துக்கு இடையே யாரும் எதிர்பாராத விதமாக நேற்று முன்தினம் திடீர் உடன்படிக்கை கையெழுத்தானது. இரு நாடுகளின் ராணுவ இயக்குநர்கள் நிலையிலான பேச்சுவார்த்தைக்கு பிறகு, இந்த உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதன்படி, இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்துவதற்காக கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் கண்டிப்புடன் கடைப்பிடிப்பது என சம்மதம் தெரிவித்து இந்த உடன்படிக்கையில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

போர் நிறுத்த ஒப்பந்தம், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுபகுதிகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், பிரச்சினைகள் எழுந்தால் அது குறித்து பேசி தீர்ப்பதற்கான வழக்கமான பேச்சுவார்த்தை நடைமுறை உட்பட அனைத்து ஒப்பந்தங்களையும் கடைப்பிடிக்க இரு நாடுகளும் சம்மதித்துள்ளதாக இந்தியா - பாகிஸ்தான் இணைந்துவெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, 1987-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையேயான தொலைபேசி தொடர்பை(ஹாட்லைன்) மீண்டும் புதுப்பிக்கவும் இந்த உடன்படிக்கையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தமானது கடந்த புதன்கிழமை இரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அந்தக் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய ஒப்பந்தத்துக்கு தேசிய மாநாடு கட்சியும் மக்கள் ஜனநாயக கட்சியும் வரவேற்பு தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x