Published : 25 Feb 2021 03:15 AM
Last Updated : 25 Feb 2021 03:15 AM

பகலிரவு டெஸ்ட் போட்டியில் 112 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி அக்ஸர் படேல் 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தல்

அகமதாபாத்

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அக்ஸர் படேல், அஸ்வின் ஆகியோரது சுழற்பந்து வீச்சில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் ரோரி பர்ன்ஸ், லாரன்ஸ், ஆலி ஸ்டோன், மொயின் அலி ஆகியோருக்கு பதிலாக ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, ஸாக் கிராவ்லி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் மொகமது சிராஜ், குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு ஜஸ்பிரீத் பும்ரா, வாஷிங்டன் சுந்தர் களமிறக்கப்பட்டனர்.

100-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இஷாந்த் சர்மாவுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நினைவு பரிசையும், உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிறப்பு தொப்பியையும் வழங்கினர். பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. டாம் சிப்லி ரன் ஏதும் எடுக்காத நிலையில் இஷாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து ஜானி பேர்ஸ்டோ ரன் ஏதும் எடுக்காத நிலையில் அக்ஸர் படேல் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். கேப்டன் ஜோ ரூட் 17 ரன்களில் அஸ்வின் பந்தில் வெளியேறினார். சீராக ரன்கள் சேர்த்த ஸாக் கிராவ்லி 84 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்த நிலையில் அக்ஸர் படேல் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். 80 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த இங்கிலாந்து அணி அதன் பின்னர் சரிவை நோக்கி பயணித்தது.

போப் 1, பென் ஸ்டோக்ஸ் 6, ஜோப்ரா ஆர்ச்சர் 11, ஜேக் லீச் 3, ஸ்டூவர்ட் 3, பென் ஃபோக்ஸ் 12 ரன்களில் நடையை கட்ட இங்கிலாந்து 48.4 ஓவர்களில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி சார்பில் அக்சர் படேல் 21.4 ஓவர்களை வீசி 6 மெய்டன்களுடன் 38 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். அஸ்வின் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 29 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில் 51 பந்துகளில், 11 ரன்கள் எடுத்த நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தை விளாச முயன்ற போது ஷார்ட் லெக் திசையில் நின்ற ஸாக் கிராவ்லியிடம் கேட்ச் ஆனது.

சேதேஷ்வர் புஜாரா 4 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஜேக் லீச் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். தனது 12-வது அரை சதத்தை அடித்த ரோஹித் சர்மா 75 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 57 ரன்களும் விராட் கோலி 44 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 19 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x