Published : 19 Feb 2021 03:23 AM
Last Updated : 19 Feb 2021 03:23 AM
ராமர் கோயிலுக்கு நன்கொடை யாக வெள்ளி செங்கற்களை அனுப்ப வேண்டாம் என்று அறக்கட்டளை நிர்வாகம் பக்தர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்காக, ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நன்கொடைகளை பெற்று வருகிறது. காசோலை அல்லது பண மதிப்புள்ள கூப்பன்கள் நன்கொடையாக வழங்கப்படுகின்றன. அத்துடன், தங்கக் காசு, வெள்ளி செங்கற்களையும் பக்தர்கள் அனுப்பி வைக்கின்றனர். அவற்றை வங்கி லாக்கரில் அறக்கட்டளை பத்திரப்படுத்தி வருகிறது.
இதுவரை சுமார் 400 கிலோ மதிப்புள்ள வெள்ளி செங்கற்கள் பக்தர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்டுள்ளன. இனிமேல் வெள்ளி செங்கற்களை சேமித்து வைப்பது கடினம் என்பதால் அவற்றை அனுப்ப வேண்டாம் என அறக்கட்டளை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து அறக்கட்டளை உறுப்பினர்களில் ஒருவரான டாக்டர் அனில் மிஸ்ரா கூறும்போது, ‘‘அறக்கட்டளையின் வங்கி லாக்கர்கள் அனைத்தும் வெள்ளி செங்கற்களால் நிரம்பியுள்ளன. பக்தர்களின் மனநிலையை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அவர்கள் அனுப்பும் வெள்ளி செங்கற்களை சேமித்து வைக்க முடியாததால், வேறு வகையில் தங்கள் நன்கொடைகளை அளிக்கும்படி கோரி வருகிறோம். இனி வரும் நாட்களில் குறிப்பாக வெள்ளி செங்கற்கள் தேவைப்படும் எனில் பக்தர்களிடம் மீண்டும் கோரிக்கை வைப்போம்’’ என்றார்.
மொத்தம் 39 மாதங்களில் ராமர் கோயில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக நாடு முழுவதும் நன்கொடை வசூல் செய்வதற்கு ஒன்றரை லட்சம் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை கோயிலுக்காக ரூ.1,600 கோடிக்கும் மேல் வசூலாகி இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இதுபோல், பக்தர்கள் பலரும் பல லட்சம் ரூபாய் மதிப்பில் தானாக முன்வந்து கோயிலுக்கு நன்கொடை அளிக்கத் தயாராக உள்ளனர்.
இச்சூழலை தவறாகப் பயன்படுத்தி போலி வங்கிக் கணக்கிலும், போலியான கூப்பன்கள் அச்சடிக்கப்பட்டும் நன்கொடைகள் வசூலிக்கப்படுகின்றன. இதன் மீதானப் புகார்களில் சிக்கி பலரும் நாட்டின் பல பகுதிகளில் கைதாகி விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT