Last Updated : 05 Jan, 2021 08:22 AM

 

Published : 05 Jan 2021 08:22 AM
Last Updated : 05 Jan 2021 08:22 AM

டெல்லியில் தமிழர்களின் கலை, கலாச்சாரம், மொழியை வளர்க்க தமிழ் அகாடமி அமைத்தது ஆம் ஆத்மி அரசு

புதுடெல்லி

டெல்லியில் வாழும் தமிழர்களின் கலை, கலாச்சாரம், மொழியை வளர்க்க தமிழ் அகாடமியை ஆம் ஆத்மி அரசு அமைத்துள்ளது. முந்தைய காங்கிரஸ், பாஜக அரசுகளிடம் முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கை பல ஆண்டு களுக்குப் பிறகு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை டெல்லிதுணை முதல்வர் மணிஷ் சிசோடியா நேற்று முன்தினம் வெளியிட்டார். அப்போது அவர் கூறும்போது, “நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் வாழும் டெல்லி கலை, கலாச்சாரம் நிறைந்தது. இவற்றை வளர்க்கும் வகையில், அதிகமாக வாழும் தமிழர்களுக்கு ஒரு மேடையாக இந்த அகாடமியை அமைத்துள்ளோம்” என்றார்.

டெல்லி அரசின் கலை, கலாச்சாரம் மற்றும் மொழிகளுக்கான துறை சார்பில் இந்த தமிழ் அகாடமி நிறுவப்பட்டுள்ளது. இத்துறையின் அமைச்சராகவும் துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளார். இந்த அகாடமி சார்பில் டெல்லியில் தமிழர்களின் திருநாளானபொங்கல் மற்றும் தமிழ் வருடப்பிறப்பு கொண்டாடப்பட உள்ளது.

இவ்விழாக்களில் தமிழர்களின் கலை, கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் பல மேடை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. தமிழ் மொழிபயிற்றுவிப்பதற்காக முழுநேர மற்றும் பகுதிநேர வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளன. தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபடுவோரை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் சிறப்பு விருதுகளையும் அளித்து தமிழ் அகாடமி கவுரவிக்க உள்ளது.

இதுபோன்ற அகாடமிக்கள் பஞ்சாபி, உருது மற்றும் இந்திக்கு ஏற்கெனவே செயல்படுகின்றன. இதைபோல் தமிழுக்கும் ஓர் அகாடமியை உருவாக்க டெல்லிவாழ் தமிழர்கள் முந்தைய காங்கிரஸ் மற்றும் பாஜக அரசுகளிடம் பல ஆண்டுகளாக கோரி வந்தனர்.இதை நிறைவேற்றிய ஆம் ஆத்மி அரசு தொடர்ந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஒடியா என மற்ற தென்னிந்திய மொழிகளுக்கும்அகாடமி அமைக்க உள்ளது. இது தொடர்பான செய்தி முதன்முறையாக கடந்த 2018, ஆகஸ்ட் 10-ல் ‘இந்து தமிழ்’ நாளேட்டில் வெளியானது.

தமிழ் அகாடமியின் துணைத் தலைவராக டெல்லிவாழ் தமிழரான என்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

‘இந்து தமிழ்’ நாளிதழிடம் என்.ராஜா கூறும்போது, பல துறைகளை சேர்ந்த 13 பேர் இந்த அகாடமியின் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் டெல்லிவாழ் தமிழர்கள். இவர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் நம் தலைநகரில் தமிழை வளர்க்க எங்கள் அகாடமி பாடுபடும்” என்றார்.

காங்கிரஸ் சார்பில் மாநகராட்சியின் 64-வது வார்டு கவுன்சிலராக 2 முறை பதவி வகித்துள்ளார். கடந்த 2019 டிசம்பரில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். தமிழ் அகாடமியில் இவர் துணைத் தலைவராக அமர்த்தப்பட்டது ஒரு அரசியல் பதவியாகக் கருதப்படுகிறது. வரவிருக்கும் தமிழக சட்டப் பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x