Published : 08 Nov 2020 03:11 AM
Last Updated : 08 Nov 2020 03:11 AM
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 132 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 பந்துகள் மீதமிருக்கையில், 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோலியை நீக்க காம்பீர் வலியுறுத்தல்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 2 முறை ஐபிஎல் தொடரில் பட்டம் வென்று கொடுத்தவருமான கவுதம் காம்பீர், இணையதளம் சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கூறியதாவது:
நிச்சயமாக ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட வேண்டும். எட்டு ஆண்டுகளாக கோப்பையை வெல்லாமல் இருப்பது மிக நீண்ட காலம். இப்படி வேறு கேப்டன் யாராவது உள்ளார்களா என கூறுங்கள். கோலி, தனது கைகளை உயர்த்தி தோல்விக்கு பொறுப்பேற்கிறேன் என்று சொல்ல வேண்டும். தோனி, ரோஹித் சர்மா நீண்ட காலமாக சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாகத் தொடர்கிறார்களே என்று கேட்கலாம். அவர்களுடன் கோலியை ஒப்பிடாதீர்கள். தோனி சிஎஸ்கேவுக்காக 3 முறையும், ரோஹித் சர்மா மும்பை அணிக்காக 4 முறையும் பட்டம் வென்று கொடுத்துள்ளனர். அவர்கள் செய்து காட்டினார்கள்.
ஒருவேளை ரோஹித் சர்மா இதுபோன்று 8 ஆண்டுகளாக மும்பை அணியில் கோப்பை வென்று கொடுக்காமல் இருந்தால் நிச்சயம் அணியில் நீடித்திருக்க முடியாது. விராட் கோலி என்பவர் அணியின் கேப்டன். வெற்றி பெறும் போது அணியின் பாராட்டுகளைப் பெற எவ்வாறு தகுதியானவரோ அதேபோன்ற விமர்சனங்கள் வரும் போது எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு கவுதம் காம்பீர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT