Published : 07 Nov 2020 03:14 AM
Last Updated : 07 Nov 2020 03:14 AM

கேரள மாநில வரலாற்றில் முதல் முறையாக பழங்குடி சமூகத்தை சேர்ந்தவருக்கு அர்ச்சகர் பதவி

திருவனந்தபுரம்

கேரள மாநில வரலாற்றிலேயே முதல் முறையாக, பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஒருவரை கோயில் அர்ச்சகராக நியமிக்க திருவாங்கூர் தேவசம் வாரியம் முடிவு செய்துள்ளது.

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் உட்பட அங்குள்ள 1,200 இந்து கோயில்களை திருவாங்கூர் தேவசம் வாரியம் நிர்வகித்து வருகிறது. இந்தக் கோயில்களில் அவ்வப்போது காலியாகும் அர்ச்சகர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து நியமிக்கும் பணியையும் அது மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், திருவாங்கூர் தேவசம் வாரியத்தின் கீழ் உள்ள சில கோயில்களில் 310 அர்ச்சகர் பதவியிடங்கள் அண்மையில் காலியாயின. இவற்றில் கணிசமான பதவியிடங்களில் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களை நியமிக்க தேவசம் வாரியம் முடிவு செய்தது. அதன்படி, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 18 பேர், பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் என 19 பேரை கோயில் அர்ச்சகர்களாக நியமிக்க திருவாங்கூர் தேவசம் வாரியம் தற்போது தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து, கேரள தேவசம் துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் தனது முகநூல் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசு அமைந்தது முதலாக தேவசம் வாரியங்களில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. ஜாதி பாகுபாடு இன்றி கோயில் அர்ச்சகர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் மாநிலத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் பிராமணர்கள் அல்லாத 133 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 19 பேர் கோயில் அர்ச்சகர்களாக பகுதி நேர அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். கேரள மாநில வரலாற்றிலேயே பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் கோயில் அர்ச்சகராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை.

முதலில், அர்ச்சகர் பதவியிடங்களில் இந்த சமூகங்களைச் சேர்ந்தவர்களிடம் இருந்து வந்திருந்த விண்ணப்பங்கள் போதுமானதாக இல்லை. எனவே, கடந்த 5-ம் தேதி சிறப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டு, பிரத்யேக தரவரிசைப் பட்டியல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு இந்தப் பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளன.

இவ்வாறு கடக்கம்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ளார்.

நான்கரை ஆண்டுகளில் மட்டும் மாநிலத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் பிராமணர்கள் அல்லாத 133 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x