Published : 07 Nov 2020 03:14 AM
Last Updated : 07 Nov 2020 03:14 AM

டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை வெற்றி எதிரணிக்கு உத்வேகம் செல்வதை விரும்பவில்லை கேப்டன் ரோஹித் சர்மா கருத்து

ரோஹித் சர்மா

துபாய்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றில், டெல்லி கேபிடல்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்த நிலையில் எதிரணியை நோக்கி உத்வேகம் செல்வதை விரும்ப மாட்டோம் என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

துபாயில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதல் தகுதி சுற்று ஆட்டத்தில், முதலில் பேட் செய்த மும்பை அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. கேப்டன் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் 2-வது ஓவரிலேயே ஆட்டமிழந்த போதிலும் குயிண்டன் டி காக் 40, சூர்யகுமார் யாதவ் 51, இஷான் கிஷன் 55, ஹர்திக் பாண்டியா 37 ரன்கள் விளாசி அசத்தினர். 201 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டெல்லி அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ரன் கணக்கை தொடங்குவதற்கு முன்னே டெல்லி 3 விக்கெட்களை தாரை வார்த்தது.

டிரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே பிரித்வி ஷா, அஜிங்க்ய ரஹானே ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினர். அடுத்த ஓவரில் பும்ராவின் அற்புதமான யார்க்கரில் ஷிகர் தவண் ஸ்டெம்பை பறிகொடுத்தார். இவர்களைத் தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயஸ் ஐயரையும் (12), பும்ரா வெளியேற்றினார். 20 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த டெல்லி அணியால் அதன் பின்னர் மீள முடியாமல் போனது. மார்கஸ் ஸ்டாயினிஸ் 65, அக்சர் படேல் 42 ரன்கள் சேர்த்த போதிலும் அது வெற்றிக்கு உதவவில்லை.

மும்பை அணி சார்பில் பும்ரா 4, டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி 10-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதேவேளையில் தோல்வி அடைந்த டெல்லி அணி நாளை நடைபெறும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் ஹைதராபாத் அல்லது பெங்களூரு அணியை எதிர்கொள்ளும்.

வெற்றி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

இதுவே எங்கள் சிறந்த ஆட்டம் என்று நினைக்கிறேன். இரண்டாவது ஓவரிலேயே ஒரு விக்கெட்டை இழந்த போதும் குயிண்டன் டி காக் மற்றும் சூர்ய குமார் யாதவ் உத்வேகத்துடன் பேட் செய்த விதம் பார்க்க பிரமாதமாக இருந்தது. அத்துடன் பின் இறுதியில் பேட்டிங்கை முடித்த விதமும் அற்புதமானது. பின்னர் பந்துவீச்சிலும் துல்லியமாக செயல்பட்டோம். நாங்கள் ஒரு வித்தியாசமான அணி என்பதால் ஒருபோதும் எந்த இலக்கையும் மனதில் நினைப்பதில்லை. நாங்கள் வித்தியாசமாக விளையாட விரும்புகிறோம்.

டி20-ல் நாம் எப்போதும் உத்வேகத்தைப் பற்றி பேசுகிறோம். எதிரணியை நோக்கி உத்வேகம் செல்வதை நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. இஷான் சிறந்த பார்மில் இருக்கிறார். எனவே அவர் நேர்மறையாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். எனவே எதிரணிக்கு அழுத்தத்தை கொடுக்க பயப்பட வேண்டாம் என்று டைம்அவுட் நேரத்தில் அவருக்கு தகவல் அனுப்பினோம். இதுபோன்ற பல்துறை அணியைக் கொண்டிருப்பது பேட்டிங் வரிசையை மாற்றுவதற்கும் பந்து வீச்சாளர்களைச் சுழற்சி முறையில் பயன்படுத்துவதற்கும் எனக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.

பும்ரா போன்ற பந்து வீச்சாளர்கள் இருக்கும் போது, கிரிக்கெட் வாழ்க்கை எளிதாகும். பும்ரா மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகியோர் உயர்மட்ட பார்மில் உள்ளனர். அவர்கள் வெவ்வேறு நாடுகளுக்கும் அணி உரிமையாளர்களுக்கும் விளையாடும் போது, அவர்களுக்கு வெவ்வேறு திட்டங்கள் உள்ளன. எங்கள் திட்டங்களை வாங்கிக் கொண்டு அவற்றை சிறப்பாக செயல்படுத்துவதற்கு அவர்களுக்கு தலை வணங்குகிறன். இவ்வாறு ரோஹித் சர்மா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x