Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM
அமெரிக்க மாகாணத் தேர்தலில் 12-க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
அமெரிக்க அதிபர், துணை அதிபர் தேர்தல் 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த தேர்தலில் அமெரிக்க பிரதிநிதிகள் அவைக்கு கடந்த முறை தேர்வு செய்யப்பட்டிருந்த ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த டாக்டர் அமி பேரா, பிரமிளா ஜெயப்பால், ரோ கன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 இந்திய அமெரிக்கர்கள் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள 50 மாகாணத் தேர்தல்களில் 12-க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 5 பேர் பெண்கள். நியூயார்க் மாகாண சட்டப்பேரவைக்கு இந்திய அமெரிக்கர் ஜெனிபர் ராஜ்குமார், கென்டகி மாகாணத்தில் நிமா குல்கர்னி, வெர்மான்ட் மாகாணத்தில் கேஷா ராம், வாஷிங்டன் மாகாணத்தில் வந்தனா ஸ்லாட்டர், மிச்சிகன் மாகாணத்தில் பத்மா குப்பா ஆகிய 5 பெண்கள் தேர்வாகியுள்ளனர்.
ஆண்களில் ஒஹியோ மாகாணத்தில் நீரஜ் அந்தானி, வடக்கு கரோலினா மாகாணத்தில் ஜெய் சவுத்ரி, அரிசோனாவில் அமிஷ் ஷா, பென்சில்வேனியாவில் நிகில் சாவல், மிச்சிகனில் ரஞ்சீவ் புரி, நியூயார்க்கில் ஜெரமி கூனி, கலிபோர்னியாவில் ஆஷ் கல்ரா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு தேர்தலில் அமெரிக்கா முழுவதும் 20 லட்சம் இந்திய அமெரிக்கர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்தியுள்ளனர் என்று வாஷிங்டனில் உள்ள அமெரிக்க முன்னேற்ற மையம் தெரிவித்துள்ளது. புளோரிடா, பென்சில்வேனியா, மிச்சிகன் மாகாணங்களில் மட்டும் சுமார் 5 லட்சம் அமெரிக்க இந்தியர்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT