Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM
கரோனா ஊரடங்கு காலத்தில் கடன் தவணை செலுத்த 6 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது. கடனுக்கு வட்டித் தொகையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் ரூ.2 கோடி வரையிலான கடன் தொகைக்கு வட்டி மீதான வட்டி ரத்து சலுகையை அரசு அறிவித்தது.
இதன்படி தனி நபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கிரெடிட் கார்டு கடன், நுகர்வோர் கடன், மின்னணு பொருள் கடன் உள்ளிட்ட அனைத்து கடன் தொகை மீதான வட்டி மீதான வட்டி ரத்து செய்யப்படுவதாகவும் நவம்பர் 5-ம் தேதிக்குள் இந்தத் தொகை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
வட்டி மீதான வட்டி ரத்து சலுகை ரூ.2 கோடி வரையிலான கடன் தொகைக்கு அளிக்கப்படும் என்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற்ற கடன் தொகைக்கும் இது பொருந்தும். ஊரடங்கு காலத்தில் தவணை செலுத்துவதற்கான சலுகையை பெற்றவர்களுக்கும், இக்கட்டான நேரத்திலும் தொடர்ந்து தவணை செலுத்தியவர்களுக்கும் இந்த சலுகை அளிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான மேல் விசாரணை நீதிபதிகள் அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வட்டி ரத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்திருந்த பிரதான மனுதாரர் கஜேந்திர சர்மா சார்பில் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தத்தா ஆஜரானார்.
அரசு அளித்த சலுகை மிகவும் திருப்தி அளிக்கிறது, இதனால் ரிட் மனுவை திரும்பப் பெறுவதாகக் கூறினார். இதை பதில் மனுவாக பதிவு செய்து கொள்ளுமாறும் அவர் கூறினார்.
இந்த மனு தொடர்பாக அரசு மற்றும் ஆர்பிஐ சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வேறொரு வழக்கில் மற்றொரு நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தபடியால் வழக்கை 18-ம் தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT