Published : 02 Nov 2020 03:13 AM
Last Updated : 02 Nov 2020 03:13 AM
‘‘உத்தர பிரதேசத்தில் டபுள் யுவராஜ்கள் தோல்வி அடைந்தனர். அதேநிலைதான் அவர்களுக்கு பிஹாரிலும் ஏற்படும். பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்’’ என்று ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகியோரைக் குறிப்பிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தார்.
பிஹார் மாநிலத்தில் மொத்தம் 243 சட்டப்பேரவை இடங்கள் உள்ளன. முதல் கட்ட தேர்தல் 71 இடங்களில் கடந்த 28-ம் தேதி நடந்து முடிந்தது. மீதமுள்ள 172 இடங்களுக்கு நவம்பர் 3 மற்றும் 7-ம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில், ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியும் பாஜகவும் கூட்டணி வைத்துப் போட்டியிடுகின்றன. லாலு பிரசாத்தின் மகனும் ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவருமான தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் மற்றும் சிறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறார்.
இந்நிலையில், 2, 3-வது கட்ட தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று 4 இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மோடி பேசியதாவது:
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ‘டபுள் யுவராஜாக்கள்’ (காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி - ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி) தோல்வி அடைந்தனர். அவர்களுக்கு பிஹார் தேர்தலிலும் அதே நிலைதான் ஏற்படும். பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.
புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது பிஹார் வீரர்களின் வீரத்தின் மீது எதிர்க்கட்சியினர் சந்தேகம் அடைந்தனர். ஆனால், தற்போது நமது அண்டை நாடு (பாகிஸ்தான்) புல்வாமா தாக்குதலில் நேரடி தொடர்புள்ளதை ஒப்புக் கொண்டுள்ளது. இது எதிர்க்கட்சியினர் அரசியல் லாபத்துக்காக இந்த நாட்டை, வீரர்களை அவமானப்படுத்தும் வகையில் நிறைய பேசியதை அம்பலப்படுத்தி விட்டது.
சமீபத்தில் கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த வேவெல் ராம்கலவான், சீசெல்ஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜையை எப்படி கொண்டாடுவது என்று எந்தப் பெண்களும் கவலைப்பட வேண்டாம். ஏழை எளிய மக்களுக்கு சாத் பூஜை வரை இலவச உணவு தானியங்கள் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்திருக்கிறோம்.
பிஹார் அரசு தற்போது இரண்டு இன்ஜின்களுடன் (ஐக்கிய ஜனதா தளம் - பாஜக) சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் டபுள் யுவராஜாக்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் ‘காட்டு ராஜ்ஜியத்தில்’ வந்தவர்.
பிஹாரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய உற்பத்தி அமைப்புகளை உருவாக்க பாஜக திட்டமிட்டுள்ளது. நமது விவசாயிகளுக்கான வேளாண் உட்கட்டமைப்புகளை ஏற்படுத்த மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடியை ஒதுக்கி உள்ளது. முதல்வர் நிதிஷ்குமாரின் எந்த உறவினராவது, மாநிலங்களவைக்கு எம்.பி.யாக வந்திருக்கிறாரா? மோடியின் உறவினர்கள் யாராவது நாடாளுமன்ற எம்.பி.க்களாக இருக்கிறார்களா? இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
நவம்பர் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT