Published : 09 Dec 2021 03:06 AM
Last Updated : 09 Dec 2021 03:06 AM
குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
முப்படைகளின் முதல் தலைமைத் தளபதி உள்ளிட்டோர் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் நாட்டின் முப்படைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் ராணுவ உயரதிகாரிகளுக்கான கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடக்கவிருந்தது. இதில் பங்கேற்பதற்காக முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் நேற்று காலை டெல்லியில் இருந்து ராணுவ விமானத்தில் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள விமானப்படை தளத்துக்கு வந்தார். பிபின் ராவத்துடன் அவரது மனைவி மதுலிகா ராவத், தலைமைத் தளபதியின் பாதுகாப்புக்காக ராணுவ பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டெர், லெப்டினன்ட் கர்னல் ஹரிஜிந்தர் சிங், ராணுவ அதிகாரிகள் குருசேவத் சிங், ஜிதேந்திர குமார், விவேக்குமார், சாய்தேஜா, ஹவில்தார் சத்பால் உள்ளிட்டோரும் வந்தனர்.
காலை 11 மணி அளவில் சூலூர் வந்தடைந்த அவர்கள், சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, அங்கிருந்து 36 பேர் வரை பயணிக்க வசதியுள்ள எம்ஐ-17வி5 ரக ராணுவ ஹெலிகாப்டரில் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் அவர்களை அழைத்துச் செல்ல வந்த வெலிங்டன் ராணுவ அதிகாரி வருண் சிங் உட்பட 14 பேர் புறப்பட்டனர். ஹெலிகாப்டரை வருண்சிங் இயக்கினார். சூலூரில் இருந்து வழக்கமாக செல்லும் வான்வழித்தடமான மேட்டுப்பாளையம், காட்டேரி பள்ளத்தாக்கு வழியாக அடர் வனப்பகுதிக்கு மேல் ஹெலிகாப்டர் சென்றது.
வெலிங்டன் கல்லூரியை நெருங்கியபோது, பள்ளத்தாக்கில் இருந்து மேலே உயர்ந்து பறக்க வேண்டிய இடம் வந்தது. அப்போது, மோசமான வானிலையாலும், அதிக பனிமூட்டத்தாலும் ஹெலி காப்டரை மேலே எழுப்ப இயலாமல் தாழ்வாகவே பைலட் ஓட்டிச் சென்றதாக தெரிகிறது.
நஞ்சப்பசத்திரம் என்ற இடத்தின் அருகே விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், அங்கிருந்த மரத்தில் மோதியது. முதலில் ஒரு மரத்தில் மோதி, பிறகு அடுத்தடுத்து இரண்டு மரங்களில் மோதி பெரும் சத்தத்துடன் விபத்துக்குள்ளானது. தரையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்தது. ஹெலிகாப்டர் விழுந்த இடம் முழுவதும் தீ வேகமாக பரவியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்களில் சிலர் தீயில் சிக்கி உடல் கருகினர். சிலரது உடல்கள் ஹெலிகாப்டர் வெடித்தபோது சிதறியுள்ளது.
பெரும் சத்தம் கேட்டு அருகே தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்த பணியாளர்கள் மற்றும் அருகே வசிக்கும் பொதுமக்கள் ஓடிச் சென்று பார்த்தனர். ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், தீயை அணைக்க முயன்றனர். ஆனால், பொதுமக்கள் நெருங்க முடியாத வகையில் தீ வேகமாக எரிந்தது. இதையடுத்து, தீயணைப்புப் படைக்கும் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற குன்னூர் தீயணைப்புத் துறையினர், வெலிங்டன் போலீஸார் மற்றும் ராணுவ அதிகாரிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகே தீ அணைக்கப்பட்டது.
மீட்புப் பணிகள்
ஹெலிகாப்டரில் பயணித்தவர் களில் வருண்சிங் உட்பட 2 பேர் மட்டுமே படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாகவும், அடுத்தடுத்து மற்ற 12 பேரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் ராணுவ அதிகாரிகள் மற்றும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உயிருடன் மீட்கப்பட்ட இருவரும் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்ததால், விபத்தில் மொத்தமாக 13 பேர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. வருண்சிங் மட்டும் ஆபத்தான நிலையில் தொடர் சிகிச்சையில் உள்ளார்.
இதைத் தொடர்ந்து முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக இந்திய விமானப் படையின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டது.
நாட்டையே மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராணுவம் மற்றும் விமானப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக காவல் துறை தரப்பிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. விபத்து நிகழ்ந்த இடத்தில் கருப்புப் பெட்டி, தடயங்களை சேகரிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அப்பகுதி முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களும் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனை அருகே உள்ள மைதானத்தில் அவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை ராணுவ அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலர், டிஜிபி, ராணுவம் உள்ளிட்ட முப்படைகளின் உயரதிகாரிகள் இன்று காலை அஞ்சலி செலுத்த உள்ளனர்.
அதைத் தொடர்ந்து அனைவரது உடல்களும் டெல்லி கொண்டு செல்லப்படும். அங்கு பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்திய பின்னர், முழு ராணுவ மரியாதையுடன் உடல்கள் நல்லடக்கம் செய்யப்படும் என ராணுவ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குன்னூர் விரைந்தார் முதல்வர்
சென்னை: ஹெலிகாப்டர் விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், தேவையான உதவிகளை ராணுவத்துக்கு வழங்கவும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அத்துடன், அமைச்சர்களையும் நேரில் செல்ல அறிவுறுத்தினார். இதையடுத்து, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் சென்று விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு இரவு 7 மணி அளவில் கோவை வந்தடைந்தார். அங்கிருந்து, காரில் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரி வளாகத்துக்கு வந்த முதல்வர், அங்கு ராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்து விபத்து குறித்து கேட்டறிந்தார். முதல்வர் குன்னூர் சென்றுள்ள நிலையில், சென்னையில் இன்று நடக்கவிருந்த அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT