Published : 12 Aug 2021 03:19 AM
Last Updated : 12 Aug 2021 03:19 AM

இமாச்சலில் கடும் நிலச்சரிவு - சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மண்ணில் புதைந்தன : 11 உடல்கள் மீட்பு: 30 பேரை தேடும் பணி தீவிரம்

இமாச்சல பிரதேச மாநிலம் கின்னாவுர் மாவட்டம் ரெக்காங் பியோ, சிம்லா இடையிலான நெடுஞ்சாலையில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அப்பகுதியில் மண்ணில் புதைந்த வாகனங்களில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஐடிபிபி வீரர்கள் ஈடுபட்டனர்.படம்: பிடிஐ

சிம்லா

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக அவ்வழியாக சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, லாரி, கார்கள் மண்ணில் புதைந்தன. இடிபாடுகளில் இருந்து 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் காணாமல் போன சுமார் 30 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இமாச்சல பிரதேச மாநிலம் மலைகள் நிறைந்த பகுதியாகும். பல்வேறு நெடுஞ்சாலை கள் மலைப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ளன. கடந்த சில வாரங்களாக அந்த மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே அவ்வப்போது நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், கின்னாவுர் மாவட்டம் ரெக்காங் பியோ, சிம்லா இடையிலான நெடுஞ்சாலையில் நேற்று மதியம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து், லாரி, கார்கள் உள்ளிட்ட சில வாகனங்கள் மண்ணில் புதைந்தன. ரெக்காங் பியோ நகரிலிருந்து சிம்லா நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் 40 பேர் பயணம் செய்ததாக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்குர் கூறும்போது, ‘‘நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபடு மாறு போலீஸாருக்கும் உள்ளூர் நிர்வாகத் தினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் (என்டிஆர்எப்) உதவியையும் கோரி உள்ளோம்’’ என்றார்.

இந்தோ-திபெத் எல்லை போலீஸ் (ஐடிபிபி) படையைச் சேர்ந்த 200 பேர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தகவலை ஐடிபிபி செய்தித் தொடர்பாளர் விவேக் பாண்டே தெரிவித்தார்.

இதுகுறித்து கின்னாவுர் நகர காவல் துணை ஆணையர் அபித் ஹுசைன் சாதிக் கூறும்போது, ‘‘நிலச்சரிவு நடந்த பகுதியில் ராணுவம், என்டிஆர்எப், சிஐஎஸ்எப் மற்றும் உள்ளூர் மீட்புக் குழுவினர் உள்ளிட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.

மீட்புப் பணியின்போது 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 25 முதல் 30 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

நிலச்சரிவு காரணமாக அந்த நெடுஞ் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள் ளது. மேலும், மலைப்பகுதியில் இருந்து மண், கற்கள் உருண்டு வந்தவண்ணம் உள்ளதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி விசாரிப்பு

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இமாச்சல பிரதேச முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலச்சரிவு குறித்து கேட்டறிந்தனர். மத்திய அரசு சார்பில் மீட்புப் பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப் படும் என அவர்கள் உறுதி அளித்தனர்.

இதனிடையே, நிலச்சரிவு தொடர்பான புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அதில் ஒரு வீடியோவில், மண் மற்றும் பாறைகள் மலையிலிருந்து பயங்கர சத்தத்துடன் உருண்டு வந்து விழுகின்றன.

கின்னாவுர் மாவட்டத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் சில கார்கள் சிக்கிக் கொண்டதில் அதில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள் 9 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x