Published : 12 Aug 2021 03:19 AM
Last Updated : 12 Aug 2021 03:19 AM
இதர பிற்படுத்தப்படுத்த வகுப்பினரை (ஓபிசி) வகைப்படுத்தி பட்டியல் தயாரிக்க மாநிலங்களுக்கு மீண்டும் அதி காரம் வழங்கும் 127-வது அரசியல மைப்பு சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையிலும் நேற்று நிறை வேறியது. நாடாளுமன்ற இரு அவை களிலும் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன், இந்த சட்டத் திருத்தம் அமலுக்கு வரும்.
மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளித்து சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘சமூக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட வர்களை அடையாளம் காண்பதற் கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை. மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது’’ என்று கடந்த மே மாதம் உத்தரவிட்டது. அதன்பின், ஓபிசி சமூகத்தினரை அடையாளம் காணும் உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து மத்திய அரசு பறித்துவிட்டதாக பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதையடுத்து, ஓபிசி பிரிவினரை வகைப்படுத்தி பட்டியல் தயாரித்து பராமரிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு மீண்டும் வழங்கும் வகையில் மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மழைக்கால கூட்டத் தொடரில் பல்வேறு விவகாரங்களை எழுப்பி, கடும் அமளியில் ஈடுபட்டு வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள், இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தனர். அதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை 127-வது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், மாநிலங்களவை யில் இந்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை தாக்கல் செய்து மத்திய சமூக நீதித் துறை மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் கூறியதாவது:
சமூக ரீதியாகவும், கல்வியறிவு ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காணவும், பட்டியல் தயாரித்து பராமரிக்கவும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அதிகாரம் அளிக்க இந்த மசோதா வகை செய்யும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், 342-ஏ (1 மற் றும் 2) சட்டப் பிரிவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். மேலும், 342-ஏ (3) பிரிவு புதிதாக சேர்க்கப்படும். இது மாநிலங்கள் தங்களுக்கென ஓபிசி பட்டியலை பராமரிக்க அதிகாரம் வழங்கும்.
மேலும், இந்த மசோதா நிறைவேறினால் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அனுமதி இல்லா மலேயே, மாநிலங்கள் தங்கள் ஓபிசி பட்டியலை நேரடியாக அறிவிக்க முடியும். சமூக, கல்வியறிவு ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களின் மத்திய பட்டியலை குடியரசுத் தலைவர் மட்டுமே அறிவிக்க முடியும்.
இவ்வாறு அமைச்சர் வீரேந்திர குமார் கூறினார்.
அதன்பின், இந்த மசோதா குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சியினர் ஒப்புக்கொண்டனர். எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட எம்.பி.க்கள் சிலர் வலியுறுத்தியதை அடுத்து மசோதா குறித்து விவாதம் நடத்தும் நேரம், 3 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது.
இதையடுத்து மாநிலங்களவையில் மசோதா மீது காரசார விவாதம் நடந்தது. இந்த விவாதத்தின்போது, இடஒதுக்கீட்டில் தற்போதுள்ள 50 சதவீத உச்சவரம்பை நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் வலியுறுத்தினர்.
சமாஜ்வாதி மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் பேசும்போது, ‘‘இடஒதுக்கீட்டில் 50 சதவீத உச்சவரம்பை நீக்கினால்தான், இந்த சட்டத் திருத்தத்தால் பிற்படுத்தப்பட்டோர் அதிக பலனடைய முடியும். ஜாதி, பொருளாதார ரீதியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தினால், அவர்களுடைய கல்வி, வீட்டின் நிலை குறித்த உண்மைகள் தெரியும்’’ என்றார்.
ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் பேசும்போது, ‘‘தலித்துகளுக்கு நீங்கள் ஏதாவது செய்ய உண்மையிலேயே விரும்பினால், 50 சதவீத உச்ச வரம்பை நீக்குங்கள். அதுவரை இந்த சட்டத் திருத்த மசோதா கண்துடைப்பாகத்தான் இருக்கும். சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வருவதை முன்னிட்டு, இந்த மசோதாவை அவசரமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது’’ என்றார்.
ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. ராம்நாத் தாக்குர், தேசியவாத காங்கிரஸ் எம்.பி. வந்தனா சவான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பினோய் விஸ்வன், மார்க்சிஸ்ட் எம்.பி. இளமாறன், திமுக எம்.பி. திருச்சி சிவா, காங்கிரஸ் தலைவர் ராஜ்மணி படேல், பிஜு ஜனதா தள எம்.பி. அமர் பட்நாயக் ஆகியோரும் 50 சதவீத உச்சவரம்பை நீக்கவும், ஜாதி ரீதியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவும் வலியுறுத்தினர்.
அதிமுக எம்.பி. தம்பிதுரை, ‘‘தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. அது தொடர்ந்து நீடிக்க வேண்டும். அதற்கு 50 சதவீத உச்சவரம்பை நீக்க வேண்டும்’’ என்றார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன், நியமன உறுப்பினர் நரேந்திர ஜாதவ் ஆகியோரும் இதை வலியுறுத்தினர்.
பின்னர் 127-வது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா மீது வாக்கெடுப்பு நடந்தது. எம்.பி.க்கள் அனைவரின் ஆதரவுடன் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது..
இந்த மசோதா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT