Published : 05 Aug 2021 03:16 AM
Last Updated : 05 Aug 2021 03:16 AM

பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் - 5 பேருக்கு இரட்டை தூக்கு; இருவருக்கு 3 தூக்கு : சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் முக்கிய தீர்ப்புஆசிரியை உள்ளிட்ட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.விஜயராஜ் (வெள்ளை நிற பேன்ட் அணிந்து நடுவில் நிற்பவர்) மற்றும் புகார்தாரர் தரப்பு வழக்கறிஞர்கள்.

சென்னை

பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் 5 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனையும், இருவருக்கு 3 தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியை உள்ளிட்ட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை துரைப்பாக்கம் குமரன்குடில் பகுதியில் வசித்து வந்தவர் டாக்டர் சுப்பையா (58). நரம்பியல் நிபுணரான இவர், சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றினார். ஓய்வுக்கு பிறகு, சென்னை அபிராமபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும் ஸ்வேதா, ஷிவானி என 2 மகள்களும் உள்ளனர். ஸ்வேதாவும், ஷிவானியும் வழக்கறிஞர்கள்.

கடந்த 2013-ம் ஆண்டு செப்.14-ம் தேதி மாலை 5 மணி அளவில் ராஜா அண்ணாமலைபுரத்தில் டாக்டர் சுப்பையாவை கூலிப்படை கும்பல் ஒன்று சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியது. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி செப்.22-ம் தேதி உயிரிழந்தார்.

இந்த கொலை தொடர்பாக சுப்பையாவின் மைத்துனரும், வருமானவரித் துறை மேல்முறை யீட்டு தீர்ப்பாய உறுப்பினருமான ஏ.ஏ.மோகன் அளித்த புகாரின் பேரில் அபிராமபுரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். சம்பவ இடத்தில் கிடைத்த சிசிடிவி பதிவுகளை வைத்து போலீஸார் துப்பு துலக்கியதில், சொத்து தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கூலிப்படை வைத்து டாக்டர் சுப்பையாவை கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் தம்பதிகளான பொன்னு சாமி, அவரது மனைவி மேரி புஷ்பம், அவர்களது மகன்கள் வழக்கறிஞர் பாசில், பொறியாளர் போரிஸ், பாசிலின் நண்பரான வழக்கறிஞர் வில்லியம், அரசு மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையாக செயல்பட்ட கபடி வீரர் ஏசுராஜன், சட்டக் கல்லூரி மாணவர் முருகன், டிப்ளமோ பட்டதாரியான செல்வபிரகாஷ், ஐயப்பன் ஆகியோருக்கு கொலை யில் தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.இதில் பலரை போலீஸார் கைது செய்த நிலை யில், எஞ்சியவர்கள் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். ஐயப்பன் மட்டும் அரசு தரப்பு சாட்சியாக அப்ரூவராக மாறினார்.

இந்த வழக்கின் விசாரணை, சென்னை பெருநகர முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக நடந்து வந்தது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தினந்தோறும் கரோனா காலகட்டத்திலும் நேரடி விசாரணையாக நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.விஜயராஜும், புகார்தாரரான மோகன் தரப்பில் வழக்கறிஞர்கள் எம்.பாலாஜி, கே.ஈஸ்வர் ஆகியோரும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபாலகிருஷ்ண லட்சுமணராஜூ, ரகுநாதன், சந்திரசேகர் உள்ளிட்டோரும் ஆஜராகி வாதிட்டனர்.

அரசு தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 173 சான்றாவணங்கள், 42 சான்றுப் பொருட்கள் குறியீடு செய்யப்பட்டது. எதிர் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 7 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் ஆக.2-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என ஏற்கெனவே நீதிபதி அல்லி அறிவித்து இருந்தார். ஆனால், ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரிபுஷ்பம் இருவரும் உடல்நிலை சரியில்லாததால் அன்று ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தீர்ப்பு ஆக.4-க்கு தள்ளி வைக்கப்பட்டது.

அதன்படி, இந்த வழக்கில் நேற்று காலை தீர்ப்பளித்த நீதிபதி எஸ்.அல்லி, குற்றம்சாட்டப்பட்டுள்ள 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்தார். குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சரிவர நிரூபிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதி, தண்டனை விவரத்தை பிற்பகலுக்கு தள்ளிவைத்தார். அப்போது அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் என்.விஜயராஜ், ‘‘இந்த வழக்கை அரிதிலும் அரிதான வழக்காகவே பார்க்க வேண்டும். திட்டமிட்டு கூலிப்படையை வைத்து கொடூரமாக டாக்டர் சுப்பையாவை கொலை செய்துள்ளனர். எனவே, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தார்.

அதையடுத்து பிற்பகலில் தண்டனையை நீதிபதி அறிவித்தார். குற்றம்சாட்டப்பட்ட பொன்னுசாமி, அவரது மகன்களான வழக்கறிஞர் பாசில், பொறியாளர் போரிஸ், பாசிலின் நண்பரான வழக்கறிஞர் வில்லியம், அரசு மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார் ஆகிய 5 பேருக்கும் கொலை மற்றும் கூட்டுச் சதி ஆகிய 2 பிரிவுகளில் இரட்டை தூக்கு தண்டனையும் ஒவ்வொரு பிரிவுக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

கூலிப்படையாக செயல்பட்ட முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 2 பேருக்கு கொலை, கூட்டுச் சதி, கொலையுடன் இணைந்த சதித் திட்டம் ஆகிய பிரிவுகளில் 3 தூக்கு தண்டனையும், ஒவ்வொரு பிரிவுக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆசிரியை மேரிபுஷ்பம், கபடி வீரரான ஏசுராஜன் ஆகியோருக்கு 2 பிரிவுகளில் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ஒவ்வொரு பிரிவுக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு மொத்தம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்த நீதிபதி, அதில் ரூ.9 லட்சத்தை டாக்டர் சுப்பையாவின் மனைவி சாந்திக்கு இழப்பீடாகவும், ரூ.1 லட்சத்தை தமிழக அரசிடமும் செலுத்த உத்தரவிட்டுள்ளார்.

தீர்ப்பை கேட்பதற்காக டாக்டர் சுப்பையாவின் மனைவி சாந்தி, மகள்கள் ஸ்வேதா, ஷிவானி ஆகியோரும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். தீர்ப்பைக் கேட் டதும் மூவரும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். அதேபோல தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் நீதிமன்றத்துக்குள்ளேயே கண்ணீர் வடித்தனர். பின்னர் அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த தீர்ப்பை உறுதி செய்ய மாவட்ட நீதிமன்றம், உயர் நீதி மன்றத்தை அணுகும். அதேபோல தீர்ப்பை எதிர்த்து குற்றம் சாட்டப் பட்டவர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x