Published : 23 Jul 2021 07:11 AM
Last Updated : 23 Jul 2021 07:11 AM
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அவர் தொடர்புடைய 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச் சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர் தலில் கரூர் தொகுதியில் போட்டி யிட்டு திமுகவின் செந்தில் பாலாஜி யிடம் தோல்வி அடைந்தார். போக்கு வரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் வாங்கிக் குவித்திருப்பதாகவும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது புகார்கள் வந்தன.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் ரகசியமாக விசாரித்து வந்தனர். போக்கு வரத்துத் துறையில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவை யில் உள்ளது. கடந்த ஆட்சியில் வாகனங்களுக்கான ஜிபிஎஸ் கருவி கொள்முதலில் தகுதியுள்ள நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில், குறிப்பிட்ட சில நிறுவனங் களுக்கு முறைகேடாக டெண்டர் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே ஜிபிஎஸ் கருவிகளை கொள்முதல் செய்ய போடப்பட்ட உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இது தொடர்பாக, அப்போது எதிர்க் கட்சியாக இருந்த திமுக, கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டு களை எம்.ஆர்.விஜயபாஸ்கர் மறுத்து வந்தார். திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் கூறிவந்தார்.
இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங் களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு (லஞ்ச ஒழிப்பு பிரிவு) போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். கரூரில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலை 6 மணி முதல் சோதனை மேற் கொண்டனர்.
அதன்படி, கரூர் ஆண்டாங் கோவில் செல்வநகரில் உள்ள விஜயபாஸ்கருக்கு சொந்தமான சாயப்பட்டறை, சரஸ்வதி நகரில் உள்ள அவரது வீடு, அவரது சகோதரர் சேகரின் வீடு, ராம்நகரில் உள்ள சேகரின் சம்பந்தி வீடு, மில் கேட்டில் உள்ள தறிப்பட்டறை, க.பரமத்தியில் உள்ள கிரஷர், அட்டைப் பெட்டி நிறுவனம், கரூர் உப்பிடமங்கலத்தில் உள்ள விஜயபாஸ்கரின் உதவியாளர்கள் சுப்பிரமணி, ரமேஷ், கார்த்தி ஆகியோரது வீடுகள் உட்பட 26 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னையில் இருந்ததாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந் திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டிஎஸ்பிக் கள், இன்ஸ்பெக்டர்கள், போலீஸார் என 200-க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டனர். செல்வநகர் ரெயின்போ டையிங் நிறுவனத்தில் 2 டிஎஸ்பிக்கள் தலைமையிலான 20-க்கும் மேற் பட்ட போலீஸாரும், மற்ற இடங் களில் தலா ஒரு டிஎஸ்பி தலைமையிலான போலீஸாரும் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், எம்.ஆர்.விஜய பாஸ்கர், அவரது சகோதரர் சேகர், ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவரான சேகரின் மனைவி சாந்தி, அவரது குடும்பத் தினர் மற்றும் உறவினர்களின் பெயர்களில் உள்ள சொத்து ஆவ ணங்களை வருவாய்த் துறையினர் மூலம் பெற்று, அவற்றையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அத்துடன் சம்பந்தப்பட்ட நபர் களின் வங்கிக் கணக்குகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
வருவாய்த் துறையினர் ஆவ ணங்களை எடுத்து வந்தபோது, அங்கிருந்த அதிமுகவினர் அவர் களை தடுத்து, ‘‘எதற்காக வெளி யிலிருந்து ஆவணங்களை உள்ளே கொண்டு செல்கிறீர்கள்” என கேட்டு வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவர்களிடம் போலீஸார் ஆவணங்களை காட்டிவிட்டு, உள்ளே எடுத்துச் சென்றனர்.
லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடப்பதை அறிந்ததும் அதிமுக கரூர் மத்திய நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக வினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டு முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து செல்வநகர், சரஸ்வதி நகர் ஆகிய இடங்களில் போலீஸார் இரும்புத் தடுப்புகள் அமைத்து, அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்லாத வகையில் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
சென்னையிலும் சோதனை
சென்னை ஆர்.ஏ.புரம் சாய் கிருபா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள எம்.ஆர்.விஜய பாஸ்கரின் வீட்டிலும் சோதனை நடந்தது. டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். சென்னை வீடு உள்ளிட்ட சில இடங்களில் சோதனை முடிந் துள்ளது. ஒருசில இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது.
ரூ.25 லட்சம் பறிமுதல்
இந்த சோதனை குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண் காணிப்பு பிரிவு போலீஸார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, அவரது தம்பி சேகர் ஆகியோரது பெய ரிலும், பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் பெயரிலும், தனது பணிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது தொடர்பாக அவர்கள் மீது கடந்த 21-ம் தேதி கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள், மற்றும் அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் என மொத்தம் 26 இடங்களில் இன்று (நேற்று) சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ரூ.25 லட்சத்து 56 ஆயிரம் ரொக்கம் மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், காப்பீடு நிறுவனங்களில் செய்யப் பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணை தொடர்ந்து நடை பெற்று வருகிறது என தெரி விக்கப்பட்டுள்ளது.
சோதனை குறித்து எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வழக்கறிஞர் செல்வம் கூறும்போது, ‘‘சொத்துக் குவிப்பு வழக்குகளுக்கு முகாந் திரம் இருக்கிறதா என்பதை கண்டறியவே இந்த சோதனை நடக்கிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT