Published : 31 May 2021 03:12 AM
Last Updated : 31 May 2021 03:12 AM

ஈரோடு, திருப்பூர், கோவையில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு - கார் ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் தொடங்கினார் : கவச உடை அணிந்து கரோனா வார்டுக்குள் சென்று நலம் விசாரித்தார்

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கவச உடை அணிந்து கரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.படம்: ஜெ.மனோகரன்

ஈரோடு / திருப்பூர் / கோவை

கரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், கார் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிபிஇ கிட் கவச உடை அணிந்து கரோனா வார்டுக்குள் சென்ற முதல்வர், தொற்றுக்கு உள்ளானவர்களை பார்த்து நலம் விசாரித்தார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தளர்வுகளற்ற ஊரடங்கு உள்ளிட்ட அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அதே நேரத்தில் மேற்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தொற்று பாதிப்பு தீவிரமாக உள்ளது. இதையடுத்து அந்த மாவட்டங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கெனவே அமைச்சர்கள் அர.சக்கரபாணி, கா.ராமச்சந்திரன் ஆகியோர் கோவையில் முகாமிட்டு கரோனா தடுப்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவ்வப்போது கோவை வந்து பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் கரோனா தொற்று தடுப்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். இதற்காக நேற்று முன்தினம் இரவே ஈரோடு வந்த முதல்வர், நேற்றுகாலை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு புதிதாக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய 300 படுக்கை வசதி கொண்ட வளாகத்தை பார்வையிட்டார். இங்கு ஏற்கெனவே, ஆக்சிஜன் இணைப்புடன் 610 படுக்கைகள் உள்ள நிலையில், தற்போது புதிதாக 300 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

பின்னர், கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றுவதற்காக தேர்வு செய்யப்பட்ட தற்காலிக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார். மேலும், ரோட்டரி சங்கம் சார்பில் 400 படுக்கைகள் அமைப்பதற்காக நடந்துவரும் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் சு.முத்துசாமி, மா.சுப்பிரமணியன், சாமிநாதன், எம்.பி.க்கள் கணேசமூர்த்தி, சுப்பராயன், அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதைத் தொடர்ந்து திருப்பூர் சென்ற முதல்வர் ஸ்டாலின், மாவட்டஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தன்னார்வலர்கள் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கை வசதி கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டு, சிகிச்சை பெறுவோருக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.

ஆட்சியர், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர், ‘‘சிகிச்சையில் சிறு, சிறு பிரச்சினைகள் இருந்தாலும், அவற்றை உடனடியாக களைய வேண்டும். கூடுதலாக ஆக்சிஜன் படுக்கைகள் தேவை இருந்தால், சூழ்நிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் வசதியை ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில் நிலைமை கட்டுக்குள் வரும்வரை, பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும்’’ என அறிவுறுத்தினார்.

பின்னர், கரோனா பாதித்தவர்களை அழைத்துச் செல்லவும், அறிகுறி இருப்பவர்களை ஆய்வகத்துக்கு அழைத்துச் சென்று வரவும் கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை தொடங்கி வைத்தார். அத்துடன், தொகுப்பூதிய அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 6 மருத்துவர்கள், 4 செவிலியர்கள் உள்ளிட்டோருக்கான பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கினார்.

திருப்பூரில் இருந்து கோவை வந்த முதல்வர், இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். கோவை மாநகராட்சி பகுதிகளில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல வசதியாக கோவிட் சிறப்பு கார் ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநகராட்சியில் ஒருமண்டலத்துக்கு தலா 10 கார்கள்வீதம் 5 மண்டலத்துக்கு 50 கார்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

அதைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்துக்குள் சென்ற முதல்வர் ஸ்டாலின், மாவட்டத்தில் நிலவும் கரோனா பாதிப்பு நிலவரம்குறித்து அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், அர.சக்கரபாணி, கா.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர்எஸ்.நாகராஜன், மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், சிகிச்சைக்காக வருவோருக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், அளிக்கப்படும் சிகிச்சைகள், படுக்கை வசதிகள், ஆக்சிஜன் கையிருப்பு, தேவை உள்ளிட்ட விவரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின், பிபிஇ கிட் கவச உடை அணிந்து கரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுக்கு சென்றார். அங்கு தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், உணவு உள்ளிட்ட வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

கரோனா வார்டுக்குள் சென்று ஆய்வு செய்தது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘கரோனா வார்டுக்குள் செல்ல வேண்டாம் என அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும், தம் உயிரை பணயம் வைத்து போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்று நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து பிறர் ஊட்டும் நம்பிக்கையும், ஆறுதலும் நோயை குணப்படுத்தும்’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x