Published : 19 Mar 2021 03:14 AM
Last Updated : 19 Mar 2021 03:14 AM
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் காவிரி - கோதாவரி இணைப்பு திட்டத்தை உறுதியாக நிறைவேற்றுவோம் என திருத்துறைப்பூண்டி தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி உறுதியுடன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அதிமுக வேட்பாளர் சி.எஸ்.சுரேஷ்குமாரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 2006-11 திமுக ஆட்சிக்காலத்தில் மின்தடை அதிகமாக இருந்தது. இதன் காரணமாகவே ஆட்சி பறிபோய்விடும் என அப்போதைய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். ஆனால், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த 3 மாதங்களிலேயே தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்து, அதை செயல்படுத்தி யும் காட்டினார்.
அதிமுக ஆட்சியில், தற்போது மின்மிகை மாநிலமாக தமிழகம் உள்ளது. இதனால், புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தை நோக்கி வரும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்துக்கு ரூ.3 லட்சத்து 500 கோடி தொழில் முதலீட்டை ஈர்த்துள்ளோம். இதன்மூலம் நேரடியாக 5 லட்சம் பேருக்கும், மறைமுகமாக 5 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். அதிமுக ஆட்சியை கலைக்கவும், கட்சியை உடைக்கவும் ஸ்டாலின் பல திட்டங்களை தீட்டினார். அதிமுக தொண்டர்களின் ஆதரவுடன் அந்த சதியை முறியடித்து 4 ஆண்டுகள் ஆட்சியை நடத்தியுள்ளேன்.
2 ஏக்கர் நிலம்
நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக கடந்த 2006 தேர்தல் அறிக்கையில் திமுக குறிப்பிட்டிருந்தது. ஆனால், 2 ஏக்கர் நிலத்தை வழங்கவில்லை. மாறாக, மக்களின் நிலத்தை திமுகவினர் பறிக்காமல் இருந்தாலே போதும் என்ற நிலைதான் அப்போதைய திமுக ஆட்சியின்போது இருந்தது. இதை மக்கள் மறந்துவிடவில்லை.விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வகையில், காவிரி - கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும் என ஆந்திரா, தெலங்கானா முதல்வர்களை தமிழக அமைச்சர்கள் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அதற்கு 2 மாநில முதல்வர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மீண்டும் அதிமுக அரசு அமைந்தவுடன் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும். திருத்துறைப்பூண்டியில் மணலி கந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டப்படும். முத்துப்பேட்டை தனி வட்டமாக உருவாக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
சிறப்பாக ஆட்சி செய்கிறோம்
அதைத் தொடர்ந்து, அதிமுக வேட்பாளர்கள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் (வேதாரண்யம்), தங்க.கதிரவன் (நாகப்பட்டினம்), பவுன்ராஜ் (பூம்புகார்), பாரதி (சீர்காழி), பாமக வேட்பாளர் சித்தமல்லி பழனிசாமி (மயிலாடுதுறை) ஆகியோரை ஆதரித்து முதல்வர் பிரச்சாரம் செய்தார். நாகை அவுரித்திடலில் அவர் பேசியது:அதிமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் பேசி வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறோம். ஆனால், கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், அவருக்குப் பிறகுஉதயநிதி என திமுக குடும்ப அரசியலைத்தான் நடத்தி வருகிறது. திமுக என்பது ஊழல் கட்சி.
தமிழகம் அமைதிப் பூங்கா
ஆனால், அதிமுக சிறுபான்மையின மக்களுக்கு எதிரான கட்சி என்பது போன்ற மாயையை தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் உருவாக்கி வருகின்றன. அவர்கள் எண்ணம் ஈடேறாது.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT