Published : 01 Mar 2021 03:16 AM
Last Updated : 01 Mar 2021 03:16 AM

புதுச்சேரி பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து ராஜினாமா

புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் பதவியை சிவக்கொழுந்து ராஜினாமா செய்து சட்டப்பேரவை செயலருக்கு கடிதம் அளித்தார். இக்கடிதம் துணைநிலை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்த நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் எம்எல்ஏக்கள் லட்சுமிநாராயணன், தீப்பாய்ந்தான், ஜான்குமார், கூட்டணிக் கட்சியான திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோர் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களில் மல்லாடி கிருஷ்ணாராவ், லட்சுமிநாராயணனை தவிர்த்து மற்றவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

ஏற்கெனவே நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் டெல்லி சென்று பாஜகவில் இணைந்தனர் இச்சூழலில் நேற்று காரைக்காலில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் முன்னாள் எம்எல்ஏக்கள் ஜான்குமார், வெங்கடேசன் ஆகியோர் பாஜகவில்இணைந்தனர். இவர்களுடன் பேரவைத் தலைவர் சிவக்கொழுந்தின் சகோதரர் வி.பி. ராமலிங்கம்,மகன் வி.சி. ரமேஷ் ஆகியோரும்பாஜகவில் இணைந்தனர். இதனால் சிவக்கொழுந்துவும் பாஜகவில் இணைவார் என்ற தகவல் பரவியது.

இந்நிலையில் சிவக்கொழுந்து தனது பேரவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து சட்டப்பேரவைச் செயலர் முனுசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ‘எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு நான் வகிக்கும் சட்டப்பேரவை தலைவர் பதவியை மட்டும் என் சுயமுடிவின்படி ராஜினாமா செய்கிறேன்’என குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு சட்டப்பேரவை செயலர் அனுப்பியுள்ளார். சிவக்கொழுந்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x