Published : 01 Mar 2021 03:16 AM
Last Updated : 01 Mar 2021 03:16 AM
மாவட்டங்களை முன்னேற்றுவதிலும், நீர்மேலாண்மையிலும், நிர்வாகத்திலும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக மத்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்தார்.
விழுப்புரம் அருகே ஜானகிபுரம் மைதானத்தில் நேற்று மாலை பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமித் ஷா பேசியது:
பாதுகாப்பு , பொருளாதாரத்தை உயர்த்த பாஜக கூட்டணி பாடுபடுகிறது. திமுகவும் காங்கிரஸும் தங்கள் குடும்பத்தினர் ஆட்சிக்கு வர பாடுபடுகின்றன. சோனியா காந்திக்கு ராகுல் காந்தி மீது கவலை. ஸ்டாலினுக்கு உதயநிதி மீது கவலை. ஊழலைப் பற்றி திமுக பேசும்போது சிரிப்பு வருகிறது. 2 ஜி ஊழல் செய்தது யார்?
திமுகவில் 3 குடும்பத்தினர், காங்கிரஸில் 4 குடும்பத்தினர் ஆட்சியில் உள்ளனர். 2ஜி, 3ஜி, 4ஜி எல்லாம் தமிழகத்தில் உள்ளது. 2ஜி என்றால் மாறன். 3 ஜி என்றால் கருணாநிதி. 4ஜி என்றால் நேரு குடும்பத்தினர்.
புதிய கல்வி கொள்கையில் உள்ளூர் மொழியை கொண்டு வந்துள்ளோம். ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்தது காங்கிரஸ் அரசு. தற்போது தமிழகத்துக்கு ஜல்லிக்கட்டை பாஜக கொண்டு வந்துள்ளது. எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை பின்பற்றிநாடு முழுவதும் பாஜக அரசு தீனதயாள் என்ற பெயரில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
கரோனா காலத்தில் தமிழக அரசு சிறப்பான நிர்வாகம் செய்தது. நல்லாட்சிக்கான விருதுகள் தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. நீர்மேலாண்மையில் அனைத்து மாநிலங்களைவிட தமிழகம் சிறப்பாக செயல்பட்டது. மாவட்டங்களை முன்னேற்றுவதிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது.
தமிழக சாலைகளை மேம்படுத்த ரூ. 1 லட்சம் கோடி, சென்னை மெட்ரோ திட்டத்துக்கு ரூ. 63 கோடி தரப்பட்டுள்ளது. 2019 முதல் மீனவர் மேம்பாட்டுக்கான திட்டத்தில் அதிக பலன் தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் சர்வதேச எல்லையில் மீன் பிடிப்போருக்கு கட்டமைப்பு ஏற்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இசிஆர் சாலை மேம்பாட்டுக்கு ரூ.13,797 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை -மதுரை தேஜஸ் ரயில் கொண்டுவரப்பட்டுள்ளது. உங்களுக்கு மக்களுக்கான ஆட்சி தேவையா? குடும்ப ஆட்சி தேவையா என்பதை முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
இக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் முருகன், முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, இல.கணேசன், அண்ணாமலை, வானதி சீனிவாசன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் கலிவரதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT