Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி வெளியீடு தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு மார்ச் 12 முதல் வேட்புமனு தாக்கல்

தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகிறார் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.படம்: பிடிஐ

புதுடெல்லி

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இதன்படி தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாகவும் அசாமில் 3 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்படுகிறது. ஐந்து மாநிலங்களிலும் மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

கரோனா பெருந்தொற்று பரவிய இக்கட்டான நேரத்தில் தேர்தல் நடத்துவது பெரும் சவாலானது. கடந்த ஜூன் மாதம்மாநிலங்களவையின் 18 இடங்களுக்கு தேர்தல் நடத்தினோம். கடந்த அக்டோபர், நவம்பரில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தினோம். எனினும் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றி வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்தோம்.

தற்போது தமிழகம், மேற்குவங்கம், கேரளா, அசாம், புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த உள்ளோம். இந்த மாநிலங்களில் 824 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. 18.68 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்காக 2.7 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.

முதியவர்களுக்கு தபால் வாக்கு

கரோனா அச்சுறுத்தல் காரணமாக 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபாலில் வாக்களிக்கும் வசதி செய்யப்படுகிறது. இது கட்டாய நடைமுறை கிடையாது. விருப்பமுள்ளவர்கள் மட்டும் தபாலில் வாக்களிக்கலாம்.

தேர்தல் பிரச்சாரம் தொடர்பான அனைத்து பணிகளுக்கும் ஆன்லைன்மூலமாக மட்டுமே அனுமதி வழங்கப்படும். சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்காக வாக்குப்பதிவுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும்.

வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளருடன், 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வேட்பாளருடன் சேர்த்து 5 பேர் மட்டுமே வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். வாகன பேரணியின்போது 5 வாகனங்கள் செல்லலாம். எனினும் அந்தந்த பகுதி தேர்தல் அதிகாரி சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுத்து கொள்ளலாம். அனைத்து கட்சிகளும், வேட்பாளர்களும் கரோனா தடுப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்த தகவல்களை அனைத்து கட்சிகளும் வெளியிட வேண்டும். இந்த விவரங்களை உள்ளூர் நாளிதழ்கள், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும்அந்தந்த கட்சிகளின் இணையதளங்களில் வெளியிட வேண்டும்.

வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள், வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக மத்திய படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

சட்டப்பேரவைத் தேர்தலில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேவையான அளவு சானிடைசர், சோப்பு, முகக்கவசம் மற்றும்பாதுகாப்பு கவச உடைகள் பயன்படுத்தப்படும். வாக்குச்சாவடிகள் தரைதளத்தில் அமைக்கப்பட வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிப்பறை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

தமிழகத்தில் தேர்தல் பார்வையாளராக தர்மேந்திர குமார், தேர்தல் செலவின பார்வையாளராக மதுமாலதி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். ஒருதொகுதியில் ஒரு வேட்பாளர் ரூ.30.80 லட்சம் வரை மட்டுமே செலவு செய்யவேண்டும். புதுச்சேரியில் ஒரு வேட்பாளர் ரூ.22 லட்சம் வரை செலவு செய்ய அனுமதி வழங்கப்படும். தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக சி விஜில் செயலி மூலம் பொதுமக்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கலாம்.

தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24-ம் தேதி நிறைவடைகிறது. மாநிலத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறும். இதேபோல புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கும், கேரளாவின் 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும்.

தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் வரும் மார்ச் 12-ம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கும். வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய மார்ச் 19-ம் தேதிகடைசி நாளாகும். மார்ச் 20-ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற மார்ச் 22-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

தமிழகத்தின் கன்னியாகுமரி, கேரளாவின் மலப்புரம் மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்.

மேற்குவங்கம், அசாம்

மேற்குவங்க சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே 30-ம் தேதி நிறைவடைகிறது. அந்த மாநிலத்தில் மொத்தம் 294 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. மேற்குவங்கத்தில் மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26, 29 தேதிகளில்8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்.

அசாம் மாநில சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்த மாநிலத்தில் 126 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு மார்ச் 27, ஏப்ரல் 1 மற்றும்6 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்.

ஐந்து மாநிலங்களிலும் மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் நடைபெறும் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் வெள்ளிக்கிழமை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின் பதவிக் காலம்ஏப்ரல் 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இது அவரது கடைசி செய்தியாளர் சந்திப்பு ஆகும்.

3 மாநில தேர்தல் அட்டவணைமனு தாக்கல் தொடக்கம்மார்ச் 12மனு தாக்கல் செய்ய கடைசி நாள்மார்ச் 19மனுக்கள் பரிசீலனைமார்ச் 20மனு திரும்ப பெற கடைசி நாள்மார்ச் 22வாக்குப்பதிவுஏப்ரல் 6வாக்கு எண்ணிக்கைமே 2

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x