Published : 30 Sep 2021 07:44 AM
Last Updated : 30 Sep 2021 07:44 AM
கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்க விரும்பும் விவசாயிகள் இணையம்வழியாக முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணான செய்திகளின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்து விசாரித்தது. அப்போது, விளைநிலங்களுக்கு நேரடியாகச் சென்று நெல் கொள்முதல் செய்யும் வகையில் நடமாடும் கொள்முதல் நிலையங்களை உருவாக்கத் திட்டமிட்டுவருவதாய் அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்போது நெல் கொள்முதலுக்கு இணையவழிப் பதிவை நடைமுறைப்படுத்தியுள்ள நிலையில், ஏற்கெனவே சொல்லப்பட்ட நடமாடும் கொள்முதல் நிலையத் திட்டம் என்னவானது என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. இந்தப் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தும் முன்பு விவசாயிகளின் கருத்துகள் பெறப்பட்டதாகவும் தெரியவில்லை. கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் காத்துக்கிடப்பதற்கு முற்றுப்புள்ளி வைப்பதைக் காட்டிலும் அதற்கான பொறுப்பிலிருந்து அரசை விடுவிப்பதே இணையவழி முன்பதிவின் நோக்கம் என்றும் விமர்சனங்கள் எழுகின்றன.
நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு அளித்த அறிவுறுத்தல்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. கொள்முதல் நிலையங்களிலிருந்து தூரத்தில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்பது அதில் ஒன்று. விவசாயிகளின் போக்குவரத்துச் செலவு, அலைச்சல் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மற்றொன்று. இணையவழி நடைமுறையில் இந்த இரண்டு அறிவுறுத்தல்களும் சரிவரப் பின்பற்றப்பட வாய்ப்புகள் இல்லை என்பதே எதார்த்தம். விளைநிலங்களிலிருந்து அறுவடை செய்யப்பட்ட நெல்லை வீட்டிலோ அல்லது பாதுகாப்பான இடங்களிலோ பாதுகாக்க வேண்டும். கொள்முதலுக்கான தேதியும் நேரமும் ஒதுக்கப்பட்டதும் மீண்டும் அங்கிருந்து கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும். வாகனச் செலவு, அதற்கான கூலி, உழைப்பு என அனைத்துமே இருமடங்கு அதிகரிக்கிறது. உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியும்கூட அரசு இதைக் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.
இணையம்வழியாகப் பதிவுசெய்வது விவசாயிகளுக்குச் சிரமமாக இருக்கக்கூடும் என்றாலும் காலப்போக்கில் அதை அவர்கள் பழகிக்கொள்வார்கள். ஆனால், கொள்முதல் நிலையங்களின் வேலைமுறைகளிலும் மாற்றம் வராதபட்சத்தில் இந்தத் திட்டமும் உரிய பலனை அளிக்க வாய்ப்பில்லை. அறுவடைக் காலங்களில் மட்டுமே கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன. எனவே, வாராந்திர விடுமுறைகளைத் தவிர்த்து, நாளொன்றுக்கு 12 மணி நேரம் வரையிலும் வேலைநேரத்தை நீட்டிக்கலாம். ஊழியர்களின் மீது பணிச் சுமையை ஏற்றாமல் சுழற்சி முறையில் அவர்களைப் பணியாற்றச் செய்ய வேண்டும். அக்டோபர் 1 தொடங்கி இணையவழிப் பதிவு தொடங்குகிறது. இன்னொரு பக்கம், தமிழ்நாட்டில் கனமழை நீடிக்கும் என்று வானிலை தகவல்கள் சொல்கின்றன. நெல்லின் ஈரப்பதம் அதிகரித்து விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால், கொள்முதல் நடவடிக்கைகளை முதல் நாளிலிருந்தே துரிதப்படுத்த வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT