Published : 10 Sep 2021 05:57 AM
Last Updated : 10 Sep 2021 05:57 AM

மூன்றாவது அலைக்கு நடுவேஉள்ளாட்சித் தேர்தல்:விபரீதமாகிவிடக் கூடாது :

ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்குத் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் தயாராகிவிட்டன. புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில், செப்டம்பர் 15-க்குள் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, மாநிலத் தேர்தல் ஆணையமும் அதற்கான ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஆறு மாத காலம் அவகாசம் கோரியுள்ள நிலையிலும் தேர்தலுக்கான ஏற்பாடுகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஆளுங்கட்சி, உடனடியாக நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிவாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கருதலாம். கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு, அதிக வாக்குச் சாவடிகளை அமைக்க வேண்டும் என்பதே தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுகவின் கருத்தாக உள்ளது. கரோனா பெருந்தொற்று இன்னும் முழுதாக நீங்காத நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது மற்றொரு அலையை உருவாக்குவதாக அமைந்துவிடக் கூடாது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ‘கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கண்காணிக்கத் தவறிய தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றம் சுமத்தினாலும் தவறில்லை’ என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. ஆனால், பெருந்தொற்றுக்கும் தேர்தலுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து நீதிமன்றங்களுக்கு இடையிலும் மாறுபட்ட கருத்துகள் நிலவின. உத்தர பிரதேசத்தில் பெருந்தொற்றின் காரணமாக உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிவைக்க அம்மாநில அரசு விரும்பினாலும், அலகாபாத் உயர் நீதிமன்றம் கால வரம்பைத் தீர்மானித்துத் தேர்தல் நடத்த உத்தரவிட்டது. கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் உத்தர பிரதேசம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதற்கு அங்கு நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தலும் முக்கியமானதொரு காரணம். புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் வாக்களிப்பதற்காக ஒரே நேரத்தில் ஊருக்குத் திரும்பியது தொற்று பரவக் காரணமாகியது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின்போதே தனிநபர் இடைவெளி, முகக் கவசம் போன்ற அடிப்படையான நோய்ப்பரவல் தடுப்பு முறைகள் பின்பற்றப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் வீடுவீடாகச் சென்று வாக்குகள் சேகரிப்பார்கள். ஊரகங்கள் தினந்தோறும் திருவிழாமயமாகக் காட்சியளிக்கும். ஒருபக்கம் நோய்ப் பரவலைக் காரணம்காட்டி, மத ஊர்வலங்களுக்குத் தடைவிதிக்கும் மாநில அரசு, அதைவிடவும் அதிகப் பரவல் வாய்ப்புள்ள உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் முனைப்புக் காட்டுவது முரணானது. மூன்றாவது அலை குறித்து மக்களிடையே அச்சமும் பதற்றமும் நிலவிவருகிறது. இந்நிலையில், ஏற்கெனவே தாமதப்படுத்தப்பட்டுவிட்ட உள்ளாட்சித் தேர்தலை மேலும் சில மாதங்களுக்குத் தள்ளிவைக்க உச்ச நீதிமன்றத்தைக் கோருவதே சரியானது. தேர்தலை நடத்தி முடிக்க அரசியல் கட்சிகள் விரும்பும்பட்சத்தில், தொற்றுப் பரவலைத் தடுக்கக் கடுமையான விதிமுறைகளை உருவாக்கவும் பின்பற்றவும் வேண்டும். நேர்மையான முறையில் மட்டுமின்றி பாதுகாப்பான வகையிலும் தேர்தல் நடத்த வேண்டிய பெரும் பொறுப்பு மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x