Published : 15 Mar 2021 03:12 AM
Last Updated : 15 Mar 2021 03:12 AM

என்ன வேண்டும் தமிழ்நாட்டுக்கு? : எஸ்.சி.நடராஜ்,இயக்குநர், சுடர், பழங்குடியினர் மேம்பாட்டிற்கான அமைப்பு

பழங்குடியினர் நில உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்: பழங்குடி மக்களின் அறியாமையையும் அவர்களின் ஏழ்மையையும் பயன்படுத்தி, அவர்களின் நிலங்களை வசதிபடைத்தவர்கள் பறித்துவிடுகின்றனர். இவ்வாறாகப் பறிக்கப்பட்ட பழங்குடியினரின் நிலங்களை மீட்டு, மீண்டும் அவர்களுக்கு வழங்க வழிவகை செய்ய வேண்டும். மேலும், பழங்குடியினர் நிலங்களைப் பிறர் வாங்குவதைத் தடைசெய்ய வழிவகை செய்யும் சட்டத்தை மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரம், பிஹார் போன்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் இயற்ற வேண்டும்.

ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம்: பழங்குடியினரின் வாழ்வாதாரம் என்பது பிரதானமாக வனப் பொருட்கள் சேகரமும் வேளாண்மையும்தான். தற்போது வேளாண்மை சிதைந்துபோன காரணத்தால், வேலை தேடிப் பிற பகுதிகளுக்கு இடம்பெயரும் வழக்கம் அவர்களிடம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தடுத்திட ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்க வேண்டும். குறிப்பாக, வனப் பகுதியில் கிடைக்கும் நெல்லிக்காய், கடுக்காய், பூச்சக் காய், சீமாறு புல் ஆகியவற்றைச் சுதந்திரமாகச் சேகரிக்கவும் அவற்றை மதிப்புக்கூட்டிச் சந்தைப்படுத்தவும் அரசு உதவ வேண்டும்.

தனி அமைச்சகம்: ஒன்றிய அரசைப் போலவே மாநில அரசும் பழங்குடியினருக்கு என ஒரு தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த அமைச்சகம் முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். பழங்குடி மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் தீர்வு காணவும் முன்பு ஏற்படுத்தப்பட்ட பழங்குடியினர் ஆன்றோர் குழுவை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். வனத்தின் மீதான பழங்குடி மக்களின் உரிமையை உறுதிசெய்திட வன உரிமைச் சட்டம் - 2006 முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

பணப் பயிர் சாகுபடிக்குத் தடை விதிக்க வேண்டும்: மலைப்பகுதிகளில் அதிகம் நீர் குடிக்கும் பணப்பயிர் சாகுபடி செய்வது இந்நிலப் பகுதியின் தன்மைக்கு முரணாக உள்ளது. விவசாயத்துக்கு ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து, அதிக தண்ணீரைக் கொண்டு பணப்பயிர் செய்வதால் நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்றுவிடும். கூடவே, ஓடையில் தண்ணீர் ஓடுவது நின்றுபோவதுடன் மழைக் காலங்களில் வனப்பகுதியில் தேங்கிய நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றும் நீர் உற்பத்தி மையங்களான வனக்குட்டைகள் வற்றிவிடும். வருங்காலங்களில் கடும் வறட்சி ஏற்பட்டு வனப்பகுதியில் உள்ள தாவரங்கள் மடிவதுடன் வன விலங்குகளும் காட்டை விட்டு சமவெளிப் பகுதிக்கு இடம்பெயரும் பேராபத்து நிகழும். வனம் வறண்டால், பூமி சூடாகி கடும் வறட்சியும் பருவநிலை மாறுதல்களும் ஏற்படும். எனவே, வனப்பகுதிகளில் பணப்பயிர் சாகுபடிக்குத் தடைவிதிக்க வேண்டும்.

மலைப்பகுதி வருவாய் தரிசு நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்: நீலகிரியில் ஏற்பட்ட நிலச்சரிவை அடுத்து 1989-ல் மலைப்பகுதி வருவாய் தரிசு நிலங்களுக்குப் பட்டா வழங்கத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையாணையை அடுத்து மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மலைப்பகுதி வருவாய் தரிசு நிலங்களுக்கும் பட்டா வழங்கத் தடை நிலவுகிறது. இதனால், உரிய நில ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் வங்கிக்கடன் அரசு நலத்திட்டங்கள் எதுவும் பெற முடியாத நிலையில் பழங்குடியினர் தவித்துவருகின்றனர். ஆகவே, இந்தத் தடையை அனைத்துப் பகுதிகளுக்கும் பொதுமைப்படுத்தாமல் கடந்த 10 ஆண்டு காலமாகப் பயன்பாட்டிலுள்ள நிலங்களுக்குப் பட்டா வழங்க ஆவன செய்ய வேண்டும்.

பழங்குடியினர் சான்றிதழில் மதம் கூடாது: பழங்குடியின மக்கள் எந்த மதத்தையும் சாதியையும் சாராத இனக்குழுக்கள். ஆகவே, இவர்களுக்கு இனச் சான்று வழங்கும்போது எந்த மதத்தையும் குறிப்பிடக் கூடாது. ஒருசில பகுதிகளில் மதப் பெயர்களையும் சேர்த்து சான்று வழங்கிவருகின்றனர். இது அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது. இந்தத் தவறு தொடரக் கூடாது.

பொது விநியோகத்தில் சிறு தானியங்கள்: மலைப் பகுதிகளில் அமைந்துள்ள பொது விநியோகக் கடைகளில் சிறுதானியங்கள் விநியோகிக்கப்பட வேண்டும். மலைவாழ் மக்களின் பாரம்பரிய உணவாகிய கேழ்வரகு, கம்பு, திணை, சாமை போன்ற சிறுதானியங்களுக்குப் பொது விநியோகத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

கூட்டு வன மேலாண்மை: வனங்களைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் மலைவாழ் மக்களின் ஒத்துழைப்போடு கூட்டு வன மேலாண்மை முறையைச் செய்திட வேண்டும்.

பழங்குடிப் பல்கலைக்கழகம்: பழங்குடி மக்களின் வாழ்வியல், வேளாண் அறிவு, மருத்துவ அனுபவங்கள், வனங்களின் மீதான அவர்களின் ஈடுபாடு ஆகியவற்றைப் பதிவுசெய்திடவும் அவற்றைத் தொகுத்து அடுத்த தலைமுறைக்கு வழங்கிடவும் பிறருக்குக் கற்றுக்கொடுக்கவும் பழங்குடியினர் பல்கலைக்கழகத்தை ஏற்படுத்த வேண்டும்.

பழங்குடியினர் நலப் பள்ளிகளைப் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க வேண்டும்: தமிழகத்தில் 17 மாவட்டங்களில் 312 பழங்குடியினர் நலப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாமல் இங்கு பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே, இந்த நலப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x