Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:16 AM
மின்னணு வாக்கு இயந்திரம் பற்றி எவ்வளவோ விவாதிக்கப்பட்டிருக்கிறது. தீவிர ஆய்வுகளையும் தாண்டி இன்னும் அது நீடிப்பதற்கு அது வேறெந்த இணைப்புடனும் தொடர்பில் இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது காரணமாகச் சொல்லப்படுகிறது. இது தவிர, இந்தக் கருவியில் முறைகேடுகள் ஏற்படாத வகையில் தொழில்நுட்பரீதியிலும் நிர்வாகரீதியிலும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. வாக்காளர்கள் தங்கள் வாக்குகள் சரியாகச் செலுத்தப்பட்டிருக்கின்றனவா என்பதைச் சரிபார்க்க ‘விவிபிஏடி’ முறையும் உள்ளது.
வாக்குச் சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும் என்று கோரிக்கைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டுவருகின்றன. ஆனால், வாக்குச்சீட்டு முறையில் கள்ள ஓட்டுகள், வாக்குச்சாவடியைக் கைப்பற்றுதல் போன்ற முறைகேடுகள் இருந்ததை மறந்துவிட முடியாது. ஆகவே, அந்த முறைக்குத் திரும்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றால், தேர்தல் ஆணையமானது மின்னணு வாக்குப் பதிவு முறையை வலுவானதாகவும் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பற்றதாகவும் ஆக்க வேண்டும். ஆயினும், ‘தொலை-வாக்குப்பதிவு’ (remote voting) முறை தொடர்பான வெள்ளோட்டம் தொடங்குவதைக் குறித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின் அறிவிப்பால் மறுபடியும் மின்னணு வாக்குப் பதிவு முறை தீவிர மதிப்பாய்வுக்கும் விமர்சனங்களுக்கும் உட்படப்போவது உறுதி. இது குறித்துத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் விரிவான எந்த ஆவணத்தையும் வெளியிடவில்லை என்றாலும் சென்னை ஐஐடியால் உருவாக்கப்பட்ட இந்த முறையானது, இதற்கென்று ஒதுக்கப்பட்ட மையங்களில் ‘இருவழி தொலை-வாக்களிப்பு’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
கரோனா பெருந்தொற்று காரணமாகத் தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்க வேண்டியதால் ‘தொலை-வாக்குப்பதிவு’ என்ற தெரிவும் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டுவருகிறது. அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் அஞ்சல் வாக்குகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. பதிவுசெய்த வாக்காளர்களுக்கு வாக்குச் சீட்டுகள் அஞ்சலில் வரும், அதில் தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்து வாக்கு மையங்களில் தருவார்கள். இல்லையென்றால், அதற்கென்றே உரிய பெட்டிகளில் இடுவார்கள். அமெரிக்கத் தேர்தலானது முழுக்க வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்துவது. தொலை-வாக்குப்பதிவிலோ ‘பிளாக்செயின்’ என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த ‘பிளாக்செயின்’ தொழில்நுட்பமானது சங்கேதப் பணங்களில் (cryptocurrencies) பயன்படுத்தப்படுவதாகும். மையப்படுத்தப்பட்ட எந்த அமைப்பும் இல்லாமல் பரிவர்த்தனைகள் செய்யும் முறை இது. இந்த அமைப்பில் வாக்காளர்கள் தங்கள் சங்கேதக் கையெழுத்துகளைப் பயன்படுத்தி, உள்நுழைந்து பதிவேட்டில் தங்கள் வாக்குகளைப் பதியலாம். இதிலுள்ள சங்கேத முறையானது தரவுகளின் பாதுகாப்புக்கும் சரிபார்ப்புக்கும் உத்தரவாதம் தருகிறது என்றாலும், இந்த அமைப்பானது ஒரு வலைப்பின்னலையும் கருவிகளையும் சார்ந்திருப்பதால் இணையம் சார்ந்த எந்த அமைப்புக்கும் உள்ள பிரச்சினைகள் இதிலும் வர வாய்ப்பிருக்கிறது.
2020 நவம்பரில் அமெரிக்காவின் எம்.ஐ.டி., ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரையானது ‘பிளாக்செயின்’ அடிப்படையிலான இந்தத் தொழில்நுட்பத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும். இதுபோல் எந்தத் தொழில்நுட்பத்தையும் பின்பற்றுவதற்கு முன்பு மக்களின் கருத்தறிதல் மிகவும் முக்கியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT