Published : 08 Dec 2021 04:07 AM
Last Updated : 08 Dec 2021 04:07 AM

தமிழகத்தில் பெய்த கனமழையால் - 1.44 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் 33 சதவீதத்துக்கு மேல் பாதிப்பு : பேரிடர் அபாய குறைப்பு முகமை தகவல்

சென்னை

தமிழகத்தில் பெய்த கனமழையால் நேற்றுவரை 1,27,811 ஹெக்டேர் வேளாண் பயிர்கள், 16,447 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்கள், மழை காரணமாக 33சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அம்முகமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் 30 மாவட்டங்களில், கடந்த 24 மணிநேரத்தில் திருச்சி மணப்பாறையில் 27.4செமீ அதிகனமழை பெய்துள்ளது.வடகிழக்கு பருவமழைக் காலமான அக்.1 முதல் டிச.7 வரை 68.3 செமீ மழை பெய்துள்ளது. இது இயல்பளவான 38.6 செமீ. விட 77 சதவீதம் அதிகமாகும்.

நிவாரண முகாம்களைப் பொறுத்தவரை, சென்னை மாநகராட்சி பகுதியில் 3 நிவாரண முகாம்களில் 257 பேர் தற்போதும் தங்கியுள்ளனர். இதர மாவட்டங்களில் 36 நிவாரண முகாம்களில் 2,156பேர் தங்கியுள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள 14,138 ஏரிகளில்8,690 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 2,989 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேல் நிரம்பியுள்ளன. 90 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 224.297 டிஎம்சியில், டிச.6 நிலவரப்படி 212 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் விருதுநகர், மதுரையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 47 கால்நடைகள் இறந்துள்ளன. 688 குடிசைகள், 115 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதுவரை1,27,811 ஹெக்டேர் வேளாண் பயிர்கள், 16,447 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்கள் 33 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 13,450 புகார்கள் வந்ததில், 12,042 புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் 1070 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு வந்த 7,227 புகார்களில் 6,937 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறைகளுக்கு 1077 என்ற எண்ணில் வந்த 7,040 புகார்களில் 6,958 புகார்கள் மீது நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x