Published : 08 Dec 2021 04:07 AM
Last Updated : 08 Dec 2021 04:07 AM

டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு கால அட்டவணை வெளியீடு : குரூப்-2, குரூப்-4 தேர்வுகளுக்கு பிப்ரவரி, மார்ச்சில் அறிவிப்பு

சென்னை

டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வுக் கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, குரூப்-2 தேர்வுக்கு பிப்ரவரியிலும், குரூப்-4 தேர்வுக்கு மார்ச்சிலும் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

ஓராண்டில் எந்தெந்தப் பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்படும், அவற்றுக்கான அறிவிப்புஎப்போது வெளியாகும் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஆண்டுதோறும் வெளியிடுகிறது.

அந்த வகையில், வரும் 2022-ம்ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் அதன் தலைவர் கா.பாலசந்திரன் நேற்று வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கரோனா சூழல் காரணமாக, 2021-ம் ஆண்டுக்கான அட்டவணையில் இடம்பெற்றிருந்த பல தேர்வுகளை நடத்த முடியவில்லை. தற்போது 2022-ம் ஆண்டுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடத்தப்படும். தேர்வுக்கான அறிவிப்பு வெளியானதில் இருந்து 75 நாட்கள் கழித்து தேர்வு நடத்தப்படும். தேர்வு முடிவுகள் இயன்ற வரை விரைவாக வெளியிடப்படும்.

குரூப்-2, குரூப்-2-ஏ தேர்வுக்கு பிப்ரவரியிலும், குரூப்-4 தேர்வுக்குமார்ச்சிலும் அறிவிப்பு வெளியிடப்படும். தற்போதைய நிலவரப்படி, குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள் மூலம் 5,831 காலி இடங்களும், குரூப்-4 தேர்வு மூலம் 5,255 காலி இடங்களும் நிரப்பப்படும். இந்த எண்ணிக்கை தோராயமானதுதான். 2021-22 ஆண்டுக்கான காலி இடங்களும் சேரும்போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.

தமிழ் தாள் தேர்ச்சி கட்டாயம்

தமிழக அரசின் ஆணைப்படி, அரசு பணிகளுக்கு தமிழ் மொழிதேர்ச்சி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குரூப்-4 தேர்வுக்கு கொள்குறி வகையிலும் (அப்ஜெக்டிவ் டைப்), குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ உள்ளிட்ட தேர்வுகளுக்கு விரிவாக விடையளிக்கும் வகையிலும் தமிழ் மொழித் தாள்இருக்கும். அதில் 40 சதவீத மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்வர்களின் இதர விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும்.

குரூப்-4 தேர்வுக்கு மட்டும் தமிழ் மொழித் தாள் மதிப்பெண், மெரிட் பட்டியலுக்கும் கணக்கில்கொள்ளப்படும். மற்ற தேர்வுகளுக்கு தமிழ் மொழித் தாளில் தேர்ச்சி பெற்றால் போதும்.

தேர்வு முடிந்து மையங்களில் இருந்து விடைத்தாள்களை எடுத்து வரும்போது முறைகேடுகள் நடக்காமல் தடுக்க, விடைத்தாள் வாகனங்களில் ஜிபிஎஸ் வசதி செய்யப்பட்டு, அதன் நகர்வுகள் கண்காணிக்கப்படும். ஏற்கெனவே நடந்து முடிந்த குரூப்-1 முதல்நிலைத் தேர்வின் அடுத்தகட்ட தேர்வான முதன்மைத் தேர்வு மார்ச்சில் நடைபெறும்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்போர் ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷனுக்காக பதியும்போது ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள், செயலர் பி.உமா மகேஸ்வரி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா ஆகியோர் உடன் இருந்தனர். நேற்று வெளியிடப்பட்ட 2022-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) காணலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x