Published : 02 Dec 2021 03:05 AM
Last Updated : 02 Dec 2021 03:05 AM
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் அரசுஐடிஐ.களில் ரூ.21.63 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களைத் திறந்து வைத்த முதல்வர்மு.க.ஸ்டாலின், நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.12.35 கோடிக்கான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் தற்போது 90 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் பல்வேறு தொழிற்பிரிவுகளில் நீண்டகால திறன் பயிற்சிகளைமாணவர்களுக்கு வழங்குவதன்மூலம் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், தொழில்நுட்பத்துக்கும் ஏற்றவாறு திறன் பெற்ற பொறியாளர்கள் உருவாகின்றனர். இதன்மூலம் மாணவர்களின் வேலைவாய்ப்பு பெறும் திறன் அதிகரிக்கிறது. அந்த வகையில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை தொடங்குதல், அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது.
அதன்படி, என்எல்சி நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியில் இருந்து நெய்வேலியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு ரூ.3 கோடியே 84 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் வகுப்பறைகள், பணிமனைக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. நாகப்பட்டினம் மாவட்டம் செம்போடை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியில் இருந்து ரூ.8 கோடியே 18 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பில் வகுப்பறை, பணிமனை, விடுதிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
மேலும், திருச்சிராப்பள்ளி - புள்ளம்பாடி கிராமம் அரசினர் தொழிற்பயி்ற்சி நிலையம், சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மற்றும் காரைக்குடி ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.9.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 3 விடுதிக் கட்டிடங்கள் என மொத்தம் ரூ.21.63 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுதவிர, தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் 15அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கல்வி உதவித்தொகையாக 31,428 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 35 லட்சத்து 64,950, மாதாந்திர உதவித்தொகையாக 17,338 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 78 லட்சத்து 98 ஆயிரம், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையாக 1,659பேருக்கு ரூ,3 கோடியே 92 லட்சத்து 31,500, திருமண உதவித்தொகை, கண்கண்ணாடி உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை, குடும்ப ஓய்வூதிய உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை என மொத்தம் 50,721 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.12 கோடியே 35 லட்சத்து 20,950-க்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 7 பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் பொன்குமார், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலர் ஆர்.கிர்லோஷ்குமார், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் கொ.வீரராகவராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT