Published : 01 Dec 2021 06:38 AM
Last Updated : 01 Dec 2021 06:38 AM

அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு - தென் ஆப்பிரிக்காவில் இருந்துஇதுவரை யாரும் தமிழகம் வரவில்லை : சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை

தென் ஆப்பிரிக்காவில் இருந்து இதுவரை யாரும் தமிழகத்துக்கு வரவில்லை. அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தொழிலாளர் நலன் திறன்மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் உடன் இருந்தார். அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் 73 தொழில் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. வேலைவாய்ப்பு முகாம் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல்வேறு பெயர்களில் உலக நாடு முழுவதும் பரவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை டெல்டா வைரஸ் பாதிப்புதான் இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், போதுமான அளவு பாதுகாப்பும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தென் ஆப்பிரிக்காவில் இருந்து இதுவரை தமிழகத்துக்கு யாரும் வரவில்லை.

பணி நிரந்தரம் செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 1,600 சுகாதார ஆய்வாளர்களுக்கும் மதிப்பெண் வழங்கி, ‘மக்களை தேடி மருத்துவ’த்தில் புதிதாக நியமனம் செய்ய இருக்கும் 2 ஆயிரத்து 600 சுகாதார ஆய்வாளர்களில் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா காலகட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு, மனிதாபிமான அடிப்படையில் இவ்வாறு முன்னுரிமை அளிக்கும்போது, அரசுக்கு எதிராக அவர்கள் செய்யும் போராட்டம் என்பது தேவையற்றது. மினி கிளினிக் மூலம் எந்த வகையிலும் தமிழக மக்களுக்கு பயன் இல்லை. எனவேதான் அங்கு பணியமர்த்தப்பட்ட மருத்துவர்களை கரோனா பணிக்கு பயன்படுத்திக் கொண்டோம்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x