Published : 29 Nov 2021 03:05 AM
Last Updated : 29 Nov 2021 03:05 AM

அரண்மனை 3 :

ஜமீன்தார் சம்பத் தனது சகோதரிகள், உறவினர்களுடன் அரண்மனையில் வசிக்கிறார். அங்கு ஒரு பேயும் வசிக்கிறது. அது அங்குள்ள சிறுமியுடன் விளையாடுகிறது. ஜமீன்தாரின் கார் ஓட்டுநரை கொல்கிறது. அடுத்து ஜமீன்தாரின் மகளையும் கொல்லத் தயாராகிறது. இந்த தருணத்தில் அரண்மனைக்குள் நுழையும் சுந்தர்.சி., அங்கு வசிப்பது பேய் அல்ல, பேய்கள் என்பதை கண்டுபிடிக்கிறார். பேய்களின் பூர்வகதையை தோண்டியெடுத்து, அவற்றை விரட்ட முயல்கிறார். பேய் விரட்டும் இந்த ஆபரேஷன் வெற்றி பெற்றதா என்பது மீதிக் கதை.

சுந்தர்.சி.யின் முந்தைய இரண்டு ‘அரண்மனை’ படங்கள் போலவே கிளாமரும், நகைச்சுவையும் கலந்துகட்டிய ‘டெம்பிளேட்’ கதை. இம்முறை செட்போடாமல் உண்மையான, பிரம்மாண்டஅரண்மனையில் படமாக்கியுள்ளனர்.

விஷுவல் எஃபெக்ட்ஸின் தரம் மிரட்டல்என்றே கூறலாம். குறிப்பாக, கருப்பு நிறவண்ணத்துப்பூச்சிகளை பயன்படுத்தி செய்துள்ள விஷுவல் எஃபெக்ட் காட்சிகள், திரும்பத் திரும்ப வந்தாலும் திகிலைஏற்படுத்துகின்றன.

பேய் படங்களில் வலுவான அம்சமாக அமையவேண்டியது ‘பேய்களுக்கான ப்ளாஷ்பேக்’ கதை. முதல் 2 ‘அரண்மனை’களில் அவற்றை வலுவாக எழுதியசுந்தர்.சி. இதில் கோட்டைவிட்டிருக்கிறார். அதேபோல, முந்தைய படங்களில் திகிலைகடந்த முக்கிய அம்சமாக பங்காற்றியது நகைச்சுவை. அது இப்படத்தில் நமுத்துப்போன ‘உருவக்கேலி’யாகவும், ‘அடல்ட்’ஜோக்காகவும் பின்தங்கிவிடுகிறது.

சுந்தர்.சி, ஆர்யா என 2 கதாநாயகர்கள். ஆனால், கவுரவத் தோற்றத்தில் வருவதுபோல, ஆர்யாவுக்கு பொருந்தாத வேடத்தில் அவரை வீணடித்துள்ளனர். ஆர்யாவின் காதலியாக வரும் ராஷி கண்ணா, வெறும் ‘கிளாமர் டால்’ ஆக வந்துசெல்கிறார்.

ப்ளாஷ்பேக்கில் வரும் ஆண்ட்ரியா தனக்கு தரப்பட்ட வேடத்தை சிறப்பாகசெய்கிறார். ஆனால், அந்த கதாபாத்திரத்தின் நோக்கமும், அதன் ஏக்கமும் முழுமை அடையாமல்போவது திரைக்கதைக்கு நியாயம் சேர்க்கவில்லை. அதனால் அவரது கதாபாத்திரம் மீது உருவாக வேண்டிய பரிதாப உணர்வு மிஸ்ஸிங். பழகி உறைந்துபோன பயத்தை முகத்தில்தேக்கியபடி, பேயுடன் விளையாடும் சிறுமியாக வரும் பேபி ஓவி பண்டார்கரின் நடிப்பில் இயல்பான ஹாரர் முத்திரை.

மறைந்த விவேக்குடன், மனோபாலா,யோகிபாபு, மைனாவதி ஆகிய நகைச்சுவை நட்சத்திரங்கள் இருந்தும் பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டது படக்குழு.

பிரம்மாண்ட அரண்மனையின் உள்ளும் புறமும் புகுந்து விளையாடி இருப்பதுடன், காடு, மலைக் கோயில், குகைக் கோயில் என காட்சிகளில் பயம் கூட்டுகிறது யு.கே.செந்தில்குமாரின் கேமரா. சத்யா.சி பின்னணி இசையில் குறைசொல்ல ஏதுமில்லை.

முதல் இரண்டு படங்களின் செய்நேர்த்தி கைகூடி வந்தும், போதிய நட்சத்திரப் பட்டாளம் இருந்தும், ‘உள்ளடக்கம்’ என்பதை நல்லடக்கம் செய்துவிட்டதால் அவ்வளவாக ஈர்க்கவில்லை ‘அரண்மனை 3’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x