Published : 27 Nov 2021 03:07 AM
Last Updated : 27 Nov 2021 03:07 AM
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், குற்றங்களில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு நேற்று வெளியிட்ட காணொலியில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
சமீபகாலமாக நாம் அதிகம்கேள்விப்படும் செய்தி ஒன்றுஎன்னை அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறது. பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல்வன்முறையும், அதைத் தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொள்வதுமான செய்தியை கேள்விப்படும்போது அவமானமாக இருக்கிறது. இவற்றைப் பற்றிபேசாமல் இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. விட்றாதீங்கப்பா என்று அந்த குழந்தைகள் கதறுவது என் மனதுக்குள் ஒலிக்கிறது.
கொடுமைக்கு முற்றுப்புள்ளி
உடல் ரீதியாக, ஒரு பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக செய்யப்படும் வெளிப்படையான பாலியல்சீண்டல்களுக்கு எதிராக எத்தனையோ சட்டங்கள் இருக்கின்றன. அந்த சட்டங்களுக்கு முன்னால் நிறுத்தப்பட்டு, இத்தகைய நபர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதி அளிக்கிறேன்.
பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்கள், குழந்தைகள் அதைப் பற்றி வெளிப்படையாகப் புகார் தருவதற்கு முன்வர வேண்டும். ஆசிரியர்களிடம், தலைமை ஆசிரியரிடம், பெற்றோரிடம், சக அதிகாரிகளிடம், நிர்வாகத்திடம் புகார் தரவேண்டும். அந்த புகார்மீது நடவடிக்கை எடுப்பதற்கு அவர்களும் தயங்கக் கூடாது.
மற்ற அனைத்தையும்விட இதைமிக முக்கியமான பிரச்சினையாகதமிழக அரசு கருதுகிறது. உண்மைக்குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை பெற்றுத் தரஇந்த அரசு தயங்காது.
குழந்தைகளுக்கான உதவி எண் ‘1098’, அரசின் நடைமுறையில் உள்ளது. எந்த குழந்தையாக இருந்தாலும் தனக்கு ஒரு பாதிப்பு என்றால் 1098 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இதில் ரகசியம் காத்து உரிய நடவடிக்கை எடுக்க சமூகநலன், மகளிர்உரிமைத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
விரைந்து தண்டனை
தமிழகம் முழுவதும் 16 மாவட்டங்களில் போக்சோ நீதிமன்றங்கள் அமைந்துள்ளன. மேலும் 4 மாவட்டங்களில் நிறுவ ஆணையிடப்பட்டுள்ளது. அனைத்து வழக்குகளையும் விரைந்து முடித்து உண்மைக் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர உத்தரவிட்டுள்ளேன்.குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தமிழக அரசால் வெளியிடப்படும் அனைத்து பாடப் புத்தகங்களிலும் குழந்தைகள் பாதுகாப்புக்கான மாணவர் உதவி எண் 14417 குறித்த விழிப்புணர்வு செய்தி, வரும் கல்வி ஆண்டில் இருந்து அச்சிடப்பட்டு வழங்கப்படும்.
அரசு காட்டும் அதே அக்கறையை பள்ளி, கல்லூரி நிர்வாகங்களும் காட்ட வேண்டும். தங்களிடம் பயிலும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை அவர்கள் உறுதி செய்தாக வேண்டும். பெற்றோர், தங்கள் பிள்ளைகளோடு எளிமையாகவும், இனிமையாகவும் பழக வேண்டும். ஒரே வீட்டுக்குள் தனித்தனி தீவுகளாக வாழ வேண்டாம்.
தந்தையாகவும் இருந்து..
உங்களை அன்போடும் பாதுகாப்போடும் வளர்க்கும் கடமை எங்களுக்கு இருக்கிறது. ஒரு முதல்வராக மட்டுமில்லாமல் ஒரு தந்தையாகவும் இருந்து உங்களை காக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. தயவுசெய்து யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT