Published : 14 Aug 2021 03:17 AM
Last Updated : 14 Aug 2021 03:17 AM
தமிழகத்தில் 1921-ம் ஆண்டு முதலான சட்டப்பேரவை நிகழ்வுகள், ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்படும் என்றும், நிதிநிலையை சரிசெய்ய இரண்டு அல்லது 3 ஆண்டுகள் தேவை என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:
அரசின் நிதிநிலைமை சரிவைநிறுத்தி, அதைச் சீர்படுத்த குறைந்தபட்சம் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வெளிப்படைத்தன்மை, சமூக ஈடுபாடு, வல்லுநர்களிடமிருந்து கருத்துரைகள் பெறுதல் மற்றும் உறுதியான நடவடிக்கை ஆகிய 4 முக்கிய கூறுகளுடன் இந்த அரசு செயல்படும். தேர்தல் வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக செயல் படுத்தப்படும்.
‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின்கீழ், மொத்தம் 4,57,645 மனுக்கள் பெறப்பட்டு, 2,29,216 குறைகளுக்கு நல்ல முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு முறையில் ஒன்றிய அரசால் கூட்டாட்சி மனப்பான்மையை நீர்த்துப்போகுமாறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. பெட்ரோல் மீதான ஒட்டுமொத்த ஒன்றிய வரி 2014 மேமாதத்தில் லிட்டருக்கு ரூ.10.39 -லிருந்து இன்று ரூ.32.90 ஆகவும், டீசல் மீதான வரி ரூ.3.57 -லிருந்துஇன்று ரூ.31.80 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
கூட்டாட்சி நிதி வடிவம் ஒன்றைஉருவாக்குவதற்காக வருவாய் மற்றும் வரிவிதிப்பு (ஜிஎஸ்டி உட்பட) தொடர்புடைய புகழ்பெற்ற சட்ட, பொருளாதார வல்லுநர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு நிறுவப்படும். அனைத்து மக்கள் மற்றும் குடும்பங்களின் உண்மையான பொருளாதார நிலையை அறிய அனைத்து துறைகளிலுள்ள தரவுகளை ஒன்றிணைக்க முயற்சி எடுக்கப்படும். அரசு கொள்முதல் முறைகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக தமிழக அரசுக்கென தனி மின்னணு கொள்முதல்வலைத்தளம் உருவாக்கப்படும்.
திறனையும் வெளிப்படைத் தன்மையையும் மேம்படுத்துவதற்காக, திட்டமிடுதல், விலை விவர அட்டவணையை புதுப்பித்தல், திட்ட வடிவமைப்பு, பணிகளின் மதிப்பீடுகள், ஒப்பந்தப் புள்ளிகள், பணிகளை அளவிடுதல் மற்றும் பணிப் பட்டியல்களுக்கு பணம் செலுத்துதல் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பதுறைகளின் நடைமுறைகளும் முழுமையாக கணினிமயமாக்கப்படும்.
பொது நிலங்கள் குறித்த சிறப்பான மேலாண்மைக்கு, ‘அரசு நிலமேலாண்மை அமைப்பு’, அரசு நிலங்கள் தொடர்பான வழக்குகளை கையாள, ‘வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு’ ஆகியவைஅமைக்கப்படும். அரசின் உட்தணிக்கை அமைப்பு முறையில் அடிப்படை சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும். அனைத்து அரசு துறைகளிலும் முகமைகளிலும் உள் தணிக்கைசெயல்பாடுகளை திறம்பட மேற்கொள்வதற்காக அரசில் செயல்படும் அனைத்துத் தணிக்கைத் துறைகளும் நிதித் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு ஒருங்கிணைக்கப்படும்.
1921-ம் ஆண்டிலிருந்து சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்த ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்படும். பேரவையின் நிதிக்குழுக்களின் (மதிப்பீடு, பொதுக் கணக்கு, பொதுத்துறை நிறுவனங்கள்) செயல்பாட்டை வலுப்படுத்துவதற்காக, கணினிமயமாக்கப்பட்ட சிறப்பு செயலகம் அமைக்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT