Published : 13 Aug 2021 03:15 AM
Last Updated : 13 Aug 2021 03:15 AM

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் - கரோனா சிகிச்சை கட்டணம் திருத்தியமைப்பு : அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கரோனா சிகிச்சைக்கான கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மருத்துவமனைகள் தவிர தனியார் மருத்துவமனைகளிலும் கரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த மே மாதம் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசு, 2 மாதங்களில் இக்கட்டணம் மறுசீரமைப்புக்கு உள்ளாக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. அதன்படி, கடந்த ஜூலை மாதம் உயர்மட்டக்குழு கூடி, கட்டணத்தை மாற்றி அமைத்துள்ளது.

இந்நிலையில், கரோனா தொற்றுகுறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை ஒருநாள் கட்டணம் என்பதற்குப் பதில்தொகுப்புக் கட்டணமாக மாற்றிஅமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

தீவிரமில்லாத கரோனா சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமாக இருந்த கட்டணம், தொகுப்பாக ரூ.3 ஆயிரம் என்றும், தீவிரமில்லாதது ஆக்சிஜனுடன் ரூ.15ஆயிரம் என்பது ரூ.7,500 ஆகவும்நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வென்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ரூ.35 ஆயிரம் என்பது, கடுமையான சுவாச செயலிழப்புக்கு தொகுப்பு கட்டணமாக ரூ.56,200 என்றும், சுவாசக்கோளாறு, உணர்விழந்த முழு மயக்கநிலை உள்ளிட்டவற்றுக்கான தீவிர சிகிச்சை பிரிவுக்கு தொகுப்பாக ரூ.31,500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெண்டிலேட்டர் இல்லாத தீவிரசிகிச்சைப் பிரிவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் தீவிரசிகிச்சைப் பிரிவில் நாள் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் என்பதற்குப் பதில்,வென்டிலேட்டர் இல்லாமல் கடும் சுவாச செயலிழப்புக்கு ரூ.27,100, செப்டிக் ஷாக் தீவிர சிகிச்சை பிரிவுக்கு ரூ.43,050 என கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளுக்கு ஏற்கெனவே முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில்நடைமுறையில் உள்ள விதிகளின்படி கட்டணம் வழங்கப்பட உள்ளது. கரோனா தொற்றுக்கு தற்போது நிர்ணயிக்கப்படும் கட்டணத்துடன் தினசரி பாதுகாப்பு கவசம், உயர்தர மருந்துகள், பரிசோதனைக்கான கட்டணத்தையும் தனியாக அரசுவழங்கும். இதன்படி, கூடுதல் கட்டணமானது ரூ.1000 முதல் ரூ.3,500வரை படுக்கை வசதிக்கு ஏற்றவகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினசரி வசூல் கட்டணம்

இதுதவிர தனியார் மருத்துவமனையில் பொதுமக்களிடம் நாளொன்றுக்கு வசூலிக்க வேண்டிய கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தீவிரமில்லாத ஆக்சிஜன் இல்லாத படுக்கைக்கு ரூ.300, ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைக்கு ரூ.7 ஆயிரம்,வென்டிலேட்டருடன் கூடிய தீவிரசிகிச்சைக்கு ரூ.15 ஆயிரம், ஆக்சிஜனுடன் கூடிய தீவிர சிகிச்சையில் படிப்படியாக குறைப்பதற்காக நாள் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x