Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா மீதான விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்கக் கூடாது எனதமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட் டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவுக்கு எதிராக கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பரில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் சுரப்பா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுரப்பா தரப்பில் வழக்கறிஞர் விஜயராகவன் ஆஜராகி, ‘‘சுரப்பா கடந்த 2018-ல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். 2020 வரை அவருக்கு எந்த பிரச்சினையும் எழவில்லை. அரியர் தேர்வு ரத்து விவகாரம், சீர்மிகு உயர்கல்வி நிறுவனம்போன்றவற்றில் ஆளுங்கட்சியினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்தான் அவருக்கு எதிராக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
துணைவேந்தரை நியமிக்கஅதிகாரம் கொண்ட ஆளுநருக்குத்தான் அவரை நீக்கவோ அல்லது அவர் மீது நடவடிக்கை எடுக்கவோ அதிகாரம் உள்ளது. சுரப்பா கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதாலும்,அதிமுக அரசுக்கு அடிபணிய மறுத்ததாலும் அரசியல் உள்நோக்கத்துடன் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுரப்பாவின் பதவிக்காலம் வரும்ஏப்ரலுடன் முடிவடையவுள்ளது. ஆனால் விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் வரும் மே வரைநீட்டிக்கப்பட்டுள்ளது. 1,000 ஆவணங்கள், 100 சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இது மனுதாரரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்பதால் விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும்’’ என வாதிட்டார்.
அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் இதற்கு ஆட்சேபம்தெரிவித்து வாதிடும்போது, ‘‘துணைவேந்தர் தன் மீதான குற்றச்சாட்டு குறித்த விசாரணையை சந்திக்க ஏன் அச்சப்பட வேண்டும். இதுபோல விசாரணை ஆணையம் அமைக்க அரசுக்கு முழு அதிகாரம்உள்ளது. முன்னாள் துணைவேந்தர்கள் பலர் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளனர். விசாரணை ஆணையம் அறிக்கை அளித்தாலும் அதன் மீது அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கப் போவதில்லை. இதில் ஆளுநர்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும். இருப்பினும் இதுதொடர்பாக பதில் அளிக்க 2 வாரம் அவகாசம் வழங்க வேண்டும்’’ என்றார்.
அப்போது பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்ஆர்.சங்கரநாராயணன், துணைவேந்தர் சுரப்பாவுக்கு எதிராக விசாரணை ஆணையம் அமைத்தது குறித்து ஆளுநர் வேதனை தெரிவித்ததாக தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘‘அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உள்ள நற்பெயரை கருத்தில்கொண்டு இதில் சுமுகத் தீர்வு காண வேண்டும். மேலும் துணைவேந்தருக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்கக்கூடாது என தமிழக அரசுக்கு இடைக்காலமாக உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக தமிழக அரசு மார்ச் 15-க்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
அண்ணா பல்கலைக்கு உள்ள நற்பெயரை கருத்தில் கொண்டு இதில் சுமுகத் தீர்வு காண வேண்டும். மேலும் துணைவேந்தருக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்கக் கூடாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT