Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார் தலைவர்கள் அஞ்சலி; சொந்த ஊரில் இன்று உடல் அடக்கம்

சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான பாலன் இல்லத்தில் தா.பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் கே.நாராயணா, மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாநில செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர்கள் கே.சுப்பராயன், மு.வீரபாண்டியன் உள்ளிட்டோர்.படம்: க.பரத்

சென்னை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் கட்சியின் தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 88. அவரது உடல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா.பாண்டியன், கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.இதற்காக ஓராண்டாக டயாலிசிஸ் செய்து வந்தார். உடல் நிலை மோசமடைந்ததால் கடந்த 24-ம் தேதிராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை 9.58 மணிக்கு காலமானார்.

அவரது உடல் அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், கலாநிதி வீராசாமி, எம்.பி. ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், பிற்பகலில் சென்னை தி.நகரில் உள்ள கட்சியின் தலைமைஅலுவலகமான பாலன் இல்லத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் நாராயணா, மூத்த தலைவர்நல்லகண்ணு, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய யூனியன் முஸ்லீம்லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், கனிமொழி எம்பி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், கவிஞர் வைரமுத்து, எம்எல்ஏக்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி, சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராஜன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட்மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுக எம்பி.க்கள் டிகேஎஸ்இளங்கோவன், தமிழச்சி தங்கபாண்டியன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மமக பொதுச்செயலாளர் அப்துல் சமத் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் நேற்றிரவு தா.பாண்டியன் உடல் சொந்த ஊரான உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைபட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று அங்கு நல்லடக்கம் நடக்கிறது.

சட்டப்பேரவையில் இரங்கல்

தா.பாண்டியன் மறைவுக்கு சட்டப்பேரவையில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை,முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறி யிருப்பதாவது:

பொதுவுடைமை கொள்கைக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்தவர் தா.பாண்டியன். பல பிரச்சினைகளை கடந்து பாலன் இல்லத்தை கம்பீரமான கட்டிடமாக கட்டி எழுப்பியது அவரது வாழ்நாள் சாதனைகளில் ஒன்றாகும். மதவெறி, வகுப்புவாதத்தை உயிர் இருக்கும் வரை என் நாவினால் விரட்டுவேன் என மதுரை அரசியல் எழுச்சி மாநாட்டில் பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனதுமதிப்புமிக்க, இணையற்ற தலைவரை இழந்து விட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x