Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

திருமண உதவி திட்டத்துக்காக 1.22 லட்சம் தங்க நாணயங்கள் ரூ.489 கோடியில் கொள்முதல் சமூகநலத் துறை அதிகாரிகள் தகவல்

சென்னை

ஏழை பெண்களின் திருமணத்துக்காக தமிழக சமூகநலத் துறைமூலம் 5 வகையான திருமணஉதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்கும் ஏழை பெண்களுக்கு தலா 8 கிராம்தங்க நாணயம் மற்றும் கல்வி தகுதிக்கு ஏற்ப ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. அவற்றை ஆய்வுசெய்து, தகுதியான பயனாளிகளுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் திருமண உதவித் தொகைவழங்கப்படுகிறது. இதனால், ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு மேலாக திருமண உதவி தொகை கிடைக்காமல் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், விண்ணப்பித்து காத்திருக்கும் பயனாளிகளுக்கு திருமண உதவி தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூகநலத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

நீண்டகாலமாக விண்ணப்பித்து காத்திருக்கும் பெண்களுக்கு திருமண உதவி தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, திருமண உதவி திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக ரூ.489.32 கோடிமதிப்பிலான 1 லட்சத்து 22 ஆயிரத்து 330 தங்க நாணயங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் அனைத்து பயனாளிகளுக்கும் திருமண உதவி தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x