Published : 11 Feb 2021 03:12 AM
Last Updated : 11 Feb 2021 03:12 AM
தற்போது உள்ள தொழிலாளர் சட்ட விதிகளின்படி, ஒரு பணியாளர் வாரத்துக்கு 6 நாட்கள், நாளொன்றுக்கு 8 மணி நேரம் எனமொத்தம் 48 மணி நேரம் வேலைசெய்ய வேண்டும். தற்போது மத்திய தொழிலாளர் நல அமைச்சகம்நாளொன்றுக்கு 12 மணி நேரம் வரை பணியாளர்களுக்கு வேலை கொடுத்து, 3 நாட்கள் விடுமுறை வழங்கும் புதிய விதிகளை அமல்படுத்த உள்ளது.
இது தொடர்பாக மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் உருவாக்கியுள்ள ‘தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள்’ குறித்த வரைவு விதிமுறையில் கூறியிருப்பதாவது:
ஒரு வாரத்தில் அதிகபட்சமாக 48 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்ய தொழிலாளர்களை அனுமதிக்க கூடாது. ஒரு நாளைக்கு ஒருமணி நேர ஓய்வு நேரம் உட்பட அதிகபட்சமாக 12 மணி நேரம் மட்டுமே பணி வழங்க வேண்டும். அதே நேரம், 5 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது. அதற்கு முன்னதாக 30 நிமிடங்கள் ஓய்வு வழங்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த விதிகளால் ஏற்படும் சாதக,பாதகங்கள் குறித்து இந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கே.இ.ரகுநாதன் கூறியதாவது:
அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்க,தொழில் செய்வதை எளிமைப்படுத்த 12 மணி நேர வேலை கொண்டுவரப்பட உள்ளது. 3 நாட்கள் விடுமுறை என்பதால், நிறுவனத்துக்கு பல்வேறு செலவுகள் குறையும். 3 ஷிப்ட் வேலை, 2 ஷிப்டாக மாறும். அதிக ஆர்டரை குறைந்த நாட்களில் முடிக்க முடியும். இந்த விதிமுறை செயல்படுத்துவது என்பது கட்டாயமில்லை. வேலை வழங்குவோர், வேலை செய்பவர்கள் இடையே ஒருமித்த கருத்து இருந்தால் மட்டுமே செயல்படுத்த முடியும்என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த விதியால் தொழிலாளர்களின் உடல்நலம் பாதிக்கப்படும். வேலையின் தரம் குறையும். சட்டத்தை முறையாக கடைபிடிக்கும்நிறுவனத்தில் எந்த பாதிப்பும் இருக்காது. சட்டத்தை கடைபிடிக்காத நிறுவனங்களில், தொழிலாளர்கள் பிழிந்தெடுக்கப்படுவார்கள். அதைகண்காணிப்பதும் சிரமம். ஊழியர்களுக்கு ஓவர் டைம் ஊதியம் கிடைக்காது. மனஅழுத்தம் அதிகரித்து, உடல் பலவீனம் அடையும். பெண்களுக்கு 12 மணி நேர வேலை கடினமாக இருக்கும். குடும்ப பராமரிப்பில் சிக்கல் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் கூறியதாவது:
தற்போது, 12 மணி நேர வேலைக்கு அனுமதி இல்லாத நிலையில், பல துணிக் கடைகளில்12 மணி நேர வேலை வாங்கப்படுகிறது. அதை சட்டமாக்கினால், மேலும் பல மணி நேரம் வேலை வாங்குவார்கள்.
ஒரு தொழிலாளி 8 மணி நேரம் வேலை செய்தால், மீண்டும் வேலையை தொடர 9 மணி நேரஓய்வு தேவை. இன்றும் இது போக்குவரத்து துறையில் கடைபிடிக்கப்படுகிறது. 12 மணி நேரம் தொடர்ந்துவேலை செய்தால், தொழிலாளர்களின் உடல் கடுமையாக பாதிக்கும். இதை எல்லாம் உணர்ந்து தான் உலக அளவில் 8 மணி நேரவேலை, வாரம் ஒரு நாள் விடுமுறை போன்ற நடைமுறைகள் வகுக்கப்பட்டன.
ஜெர்மனியில் வாரத்துக்கு 35 மணி நேரமாகவும், ஸ்வீடனில் 32 மணி நேரமாகவும் வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்தியாவில் வேலை நேரத்தை குறைக்க முயற்சிக்காமல், ஏற்கெனவே உள்ள 48 மணி நேர வேலையை4 நாட்களில் செய்ய சொல்வதை ஏற்க முடியாது. இதை செயல்படுத்தினால் தொழிலாளர்களின் சராசரி வாழ்நாள் 45 ஆண்டுகளாக குறையும். இப்போது உள்ள தொழிலாளர் சட்ட விதிமீறல்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வழி இல்லாத நிலையில், அந்த சட்ட விதிகளை மேலும் தளர்த்தினால், தொழிலாளர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். 3 நாட்கள் விடுமுறையும் கிடைக்காது. இது தொழில் நிறுவனங்களுக்கே சாதகமாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT